இலங்கையர்களுக்கு ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை! அவரின் கோபத்திற்கு காரணம் யார்?

மீண்டும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவித்து, இன வன்முறைகளை தூண்டும் சதித் திட்டங்கள் இடம்பெற்றுவருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த சில நாட்களாக மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி வன்முறைகளை தூண்டிய சிங்கள மக்களின் பாதுகாவலன் என தன்னை அழைத்துக்கொண்ட டான் பிரயசாத் என்ற நபரை, கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் சிலரே தூண்டி விட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றன.

இதுபோன்ற செயற்பாடுகளுக்கு இனியும் நாட்டில் இடமளிக்க முடியாது. நாட்டில் தற்போது நிலவும் சுதந்திரத்தை பயன்படுத்தி இவ்வாறான செயல்களில் ஈடு பட அனுமதிக்க முடியாது.

இதேவேளை சில ஊடகங்களும் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டுவருகின்றன. மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைவதற்காக சில ஊடகங்கள் இவ்வாறு நடந்துகொள்கின்றன.

இதனால் ஊடகங்களின் செயற்பாடுகள் தொடர்பில் மறுபரீலினை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமக்குரிய அதிகாரங்கள் சிலவற்றை நாடாளுமன்றத்திடம் ஒப்படைத்துள்ள போதிலும், நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நிரந்தர சமாதானத்தை கட்டியெழுப்பும் மிகப்பெரிய பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட அவர்,

முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் பின்னர், அனைவர் மத்தியிலும் இலங்கை பிரஜைகள் என்ற உணர்வை ஏற்படுத்தும் பொறுப்பையும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளர்.

கிரிக்கட் போட்டிகளில் இலங்கை அணி வெற்றிபெறும் போதே நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் கொண்டாடிய நிலைமாறி, இலங்கை பிரஜைகள் என்ற அடையாளத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டு செயற்படக்கூடிய நிலமையை உருவாக்குவே ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் பிரதான நோக்கம்.

30 வருட கொடூர யுத்தத்திற்குப் பின்னர் இனங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள ஒற்றுமை மற்றும் சமாதானத்தை சீர்குலைக்க இடமளிக்க முடியாது.

இனங்களுக்கிடையிலான சமாதானத்தை குழப்ப முற்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.