இராணுவ புரட்சி ஏற்படும்! ஜனாதிபதிக்கு எச்சரிக்கை – நாடாளுமன்றத்தில் கூச்சல்

இப்படியே அமைதியாக இருந்தீர்களாயின் இராணுவ புரட்சியினை சந்திக்க நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

நல்லாட்சி என்ற பெயரில் தற்போது முறையான செயற்பாடுகள் இடம் பெற்று கொண்டிருக்கின்றது, இது தொடர்பில் ஜனாதிபதி கவனத்தில் எடுக்க வேண்டும்.

ஜனாதிபதி அமைதியாக இருந்தால் சரிப்பட்டு வராது, இப்போது நாட்டில் சூழ்ச்சிகள் நிறைந்து காணப்பட்டு வருகின்றது. பாராளுமன்றத்தின் சட்டங்களுக்கு அமைய எமக்கு பாராளுமன்றத்தில் உரையாற்றவும் சரியான நேரம்கொடுக்கப்படுவதில்லை.

இவ்வாறான ஒரு பக்கசார்பான நிலையே காணப்பட்டு வருகின்றது, உண்மையில் நாடு பயணித்து வரும் அபாய நிலையை ஜனாதிபதி அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

மேலும், ஜனாதிபதி இருக்கும் போதே இதனை தெரிவித்து கொள்கின்றேன், நாடு தொடர்பில் அவதானமாக இருங்கள் இராணுவ புரட்சி ஒன்று ஏற்படும் சாத்தியக் கூறுகள் தற்போது இருக்கின்றது எனவும் தினேஸ் குணவர்தன எச்சரிக்கை ஒன்றினையும் விடுத்தார்.

இதேவேளை தினேஸ் குணவர்தன உரை நிகழ்த்தும் போது பாராளுமன்றத்தில் பலரும் பல்வேறு வகையான கோஷங்களை எழுப்பி சபை நடவடிக்கைகளை குழப்பும் விதமாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.