வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அமோக வெற்றி

2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 107 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று மாலை 5 மணியளவில் குறித்த வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது.

இதில் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 162 பேரும், எதிராக 55 பேரும் வாக்களித்திருந்தனர்.

மேலும் குறித்த வாக்கெடுப்பிற்கு 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகைத்தரவில்லை.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் வாய் மூலமான வாக்கெடுப்பு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வாக்கெடுப்பு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் பெரும் கரகோஷங்கள் எழுந்ததுடன், இதற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.

புதிய இணைப்பு

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்பித்த வரவு செலவுத் திட்டம் தொடர்பான இரண்டாம் முறை வாசிப்பு 107 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 162 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 55 வாக்குகள் அளிக்கப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து. கூட்டு எதிர்க்கட்சியினரும் மக்கள் விடுதலை முன்னணியினரும் எதிராக வாக்களித்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இதனால், வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் முறை வாசிப்பு 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதம் நாளை ஆரம்பமாக உள்ளது.