உயிரிழந்த 14 வயது சிறுமியின் இறுதி வேண்டுகோள்: வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பளித்த நீதிபதி

பிரித்தானிய நாட்டில் புற்றுநோயால் உயிரிழந்த 14 வயது சிறுமியின் இறுதி வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் அந்நாட்டு நீதிமன்றம் முதன் முதலாக ஒரு வரலாற்று தீர்ப்பினை வழங்கியுள்ளது.

இங்கிலாந்து தலைநகரான லண்டனில் பெயர் வெளியிடப்படாத 14 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் சிறுமிக்கு புற்றுநோய் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த ஓராண்டு காலமாக சிகிச்சை மேற்கொண்ட நிலையில், அவரை குணப்படுத்த முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், 14 வயது சிறுமியான அவர் உயிரிழக்க விரும்பவில்லை. இந்நோயில் இருந்து குணமாகி மீண்டும் உயிர் பிழைக்க என்ன வழி என இணையத்தளங்களில் தேடியுள்ளார்.

அப்போது, இறந்த உடல்களை கடுமையான குளிர் சூழப்பட்ட நிலையில் பதனிடும் முறையை சிறுமி அறிந்துள்ளார்.

‘நான் இறந்த பின்னரும் எனது உடலை இதுபோல் குளிரூட்டப்பட்ட நிலையில் பாதுகாக்கப்பட்டால் என்றாவது ஒருநாள் நான் நிச்சயம் உயிர் பிழைத்து எழுவேன்’ என அந்த சிறுமி நம்பியுள்ளார்.

இதனை தனது பெற்றோருடன் தெரிவித்தபோது அவரது தந்தை இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

எனினும், தனது முயற்சியை கைவிடாத அச்சிறுமி நீதிமன்றத்தில் தனது இறுதி வேண்டுகோளை கூறி தான் இறந்த பின்னர் உடலை எனது தாயார் பதனப்படுத்த நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிரித்தானிய நாட்டு வரலாற்றில் இதுபோன்ற வழக்கு பதியப்படுவது இதுவே முதல் முறையாகும்.

வழக்கு பதிவு செய்த சிறுமி கடந்த மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும், சிறுமி இறக்கும் நேரத்தில் இவ்வழக்கு நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. சிறுமியின் உருக்கமான கோரிக்கையை ஏற்ற நீதிபதி அவரது விருப்பப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாரு உத்தரவிட்டுள்ளார்.

இதன் பின்னர், சிறுமி உயிரிழந்ததும் அவரது உடலை அமெரிக்க கொண்டு சென்ற அவரது தாயார் அதனை தற்போது குளிரூட்டப்பட்ட நிலையில் பதப்படுத்தி பாதுகாத்து வருகிறார்.

கடந்த ஒரு மாத காலமாக நிகழ்ந்து வரும் இச்சம்பவம் தொடர்பான ரகசிய தகவல்கள் நேற்று தான் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன.

சிறுமியின் விருப்பம் நிறைவேறி அவர் மீண்டும் உயிர்பெற்று வருவார் என்ற நம்பிக்கையில் அவரது தாயார் காத்திருப்பது பிரித்தானிய பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.