மகிந்த ராஜபக்சவின் புதிய விஸ்வரூபம்! ஜாதக முடிவுகள் ஏதும் பார்த்தாரா?

முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் தலைவர் அல்லது முதன்மையானவர் என்பதை வெளிப்படுத்துவதையே தன் எண்ணமாகக் கொண்டிருக்கிறார்.

மகிந்த ராஜபக்சவிற்கு தெற்கில் அதிகாரப் பிரியர் என்று சிலர் புனைபெயர் சூட்டியிருக்கின்றனர். அதற்கு வலுச்சேர்க்கும் விதத்தில் மகிந்த ராஜபக்சவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட ஒரு பதாகை வெளியிடப்பட்டுள்ளது.

பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்சியில் மகிந்த ராஜபக்சவின் தம்பியும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்றைய தினம் இணைந்து கொண்டார்.

இன்று அக்கட்சியின் முதல் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. அத்தோடு ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தலைவர்கள் அமர்ந்திருந்த இருக்கைகளுக்கு பின்னால் வைக்கப்பட்டிருந்த கட்சியின் சின்னமாகிய பதாகையில் மகிந்த ராஜபக்சவின் உருவப்படம் பொறிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களும் அதனை கவனத்தில் எடுத்துச் சென்றுள்ளனர்.

தான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து விலகப்போவதில்லை என்று முன்னர் மகிந்த ராஜபக்ச அறிவித்திருந்தார். ஆனால் இப்பொழுது புதுக்கட்சியின் தோற்றத்தில் அவரின் படம் பொறிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இது சாதாரண சிங்கள மக்களை கவர்ந்து இழுக்கும் உத்தி என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள். இதற்கிடையில் மகிந்த ராஜபக்சவை எப்பாடுபட்டேனும் அந்தக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்துவோம் என்று கருத்து கூறிவருகின்றார்கள் அக்கட்சியில் இருப்பவர்கள்.

தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றவுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை பறிகொடுத்த மகிந்த ராஜபக்சவிற்கு இப்பொழுது, மீண்டும் புதிய கட்சியில் இருந்து தலைமைப்பதவி கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக ஏற்பட்டிருக்கிறது.

அதற்கு முன்னோட்டமாக மகிந்தவின் சகோதரர் பசில் அந்தக் கட்சியில் இணைந்து கொண்டுவிட்டார். மெல்ல மெல்ல ராஜபக்சாக்கள் அந்தக் கட்சியில் மொத்தமாக இணைந்து கொள்வார்கள் போன்றே தோன்றுகிறது.

ஆனால் அது சிங்கள மக்கள் மத்தியில் எடுபடுமா என்பதை இப்போதே கணிக்க முடியாது. அது அடுத்துவரவுள்ள தேர்தல் முடிவுகள் தான் பதில் சொல்லும்.

இதற்கிடையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் தன்னுடைய அரசியல் வாழ்வில் ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்து மகிந்த ராஜபக்ச ஜோதிடக் கணிப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்றும். அதன்படியே புதிய கட்சிக்கு அவர் பீரிஸை தலைவர் ஆக்கியிருக்கக் கூடும் என்று சொல்கிறது பிறிதொரு தரப்பு.