நோய் தடுப்பு ஊசியேற்றிய புலி உறுப்பினர் திடீர் மரணம்!

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலையாகி வவுனியா, புளியங்குளம், பனிக்கநீராவி பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி எஸ்.அமலதாஸ் (வயது 46)  கடந்த மூன்றாம் திகதி திடீரென மயக்கமுற்று விழுந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இது சம்பந்தமாக இறந்தவரின் மனைவி நாகேஸ்வரி  விபரம் தெரிவிக்கையில்

எனது கணவருக்கு 5 வருடங்களுக்கு எந்த நோயும் வராது எனக் கூறி தடுப்பு முகாமில் இருக்கும்போது ஊசிபோட்டுள்ளார்கள். 5 வருடம் முடிந்தவுடனேயே இறந்து விட்டார்.

கணவர் இறந்து 13 நாட்கள் கடந்தும்  மருத்துவ பரிசோதனையின் அறிக்கை  கிடைக்கவில்லை எனவும் எனது கணவன் அமலதாஸ் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து 2009 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து அருணாசலம் முகாமில் தஞ்சமடைந்திருந்த போது இராணுவத்தினரின் அறிவுறுத்தலுக்கு அமைய சரணடைந்திருந்தார்.

அவரை புனர்வாழ்வுக்குட்படுத்தி  2011 ஆம் ஆண்டு மருதமடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து விடுதலை செய்தனர். இதன்போது தனக்கு ஊசி ஒன்று போடப்பட்டதாகவும் அதனால் 5 வருடத்திற்கு எந்த நோயும் வராது என இராணுவத்தினர் கூறியதாகவும்  என்னிடம் தெரிவித்திருந்தார்.

கடந்த மூன்றாம் திகதி கூலி வேலைக்குச் சென்று  மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்த போது திடீரென மயங்கி விழுந்ததை தொடர்ந்து நாம்  அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்து விட்டார் என்று கூறினார்கள். எனது கணவருக்கு நடந்த சம்பவங்களை வைத்திய அதிகாரிகளுக்கு கூறினேன் அதன் காரணமாக கணவரின் கண், மூளை, பல், நாக்கு போன்ற உறுப்புக்களை பரிசோதனைக்காக  அகற்றிக்கொண்டு உடலை தந்தார்கள்.

எனது கணவரே குடும்பத்தை முழுமையாக நடத்தி வந்தார். தற்போது அவர் இறந்தமையால் பிள்ளைகளுடன் நான் மிகவும் கஷ்டப்படுகின்றேன்.

சமுர்த்தி உதவி கூட எமக்கு கிடைக்கவில்லை. வாழ்வாதாரத்திற்காக பேராட வேண்டிய நிலையில் இருப்பதாக அமலதாஸ் நாகேஸ்வரி கூறினார்.