வறுமையில் வாடும் கிராமத்தை தத்தெடுத்த பிரபல நடிகர்

தமிழ், தெலுங்கு சினிமாக்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ்.

சமூக சேவைகளில் ஈடுபாடு கொண்ட இவர் ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை தத்தெடுத்து அங்குள்ள மக்களுக்கு தண்ணீர் வசதி, சாலைகள் வசதி, அடி குழாய்கள் அமைக்கும் வசதி என பல அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தார்.

இந்நிலையில், பிரகாஷ்ராஜ் மீண்டும் வேறு ஒரு கிராமத்தை தத்தெடுத்துள்ளார். ஆந்திராவின் சீமாந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொண்டரெட்டிபள்ளி என்னும் கிராமத்தை அவர் தத்தெடுத்துள்ளார்.

அந்த கிராமத்துக்கு இன்று தன் குடும்பத்துடன் சென்ற பிரகாஷ்ராஜ் அந்த கிராமத்தில் தேவைப்படும் முக்கிய விடயங்கள் குறித்து ஆய்வு செய்தார். அதன்படி அங்கு பாழடைந்த நிலையில் இருக்கும் பள்ளிக்கூடங்களை சீரமைக்கவும் இன்னும் சில அடிப்படை தேவைகளை அந்த கிராமத்துக்கு செய்து தரவும் அவர் முடிவு செய்துள்ளார்.