நோயை மாற்றுவதும் மாரகம் ஆக்குவதும் காலத்தின் அசைவே!

ஒருவருக்கு நோய் ஏற்பட்டுள்ளது என்று எடுத்துக் கொண்டால் அந்த நோய் குணமடைவதற்கு சில நாட்களோ அல்லது சில வாரங்களோ ஆகலாம்.

எடுத்த எடுப்பில் – ஒரு கணப்பொழுதில் நோயை குணப்படுத்துதல் என்பது ஒருபோதும் சாத்திய மற்றது.

ஆக, நோய்க்கிருமி உடலில் நுழைந்துவிட்டால் அது அழிந்து பாதிக்கப்பட்டவர் மீள்வது என்பது காலத்தின் அசைவிலேயே தங்கியுள்ளது.

இதேவேளை ஒருவருக்கு நோய் ஏற்பட்டுவிட்டால் அந்த நோய் ஒரு கணப்பொழுதிலேயே ஆளை முடித்துவிடாது.

நோயின் தாக்கத்தால் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தீர்மானிப்பதும் காலத்தின் அசைவுதான்.

நோய்ப் பாதிப்புக்கு ஆளானவர் நாட்கள் செல்லச் செல்ல அந்த நோயின் கடுமைக்கு உட்படுகிறார். இந்நிலையில் காலத்தின் அசைவு நோய் முற்றி ஆளையே முடித்து விடுகிறது.

மேற்குறிப்பிட்ட நோய் குணமாதல்; நோய் முற்றி ஆள் முடிதல் என்ற இரண்டு நேர் மறையான சம்பவங்கள் காலத்தின் அசைவிலேயே நடக்கக்கூடியவை.

எனவே காலம் என்பது மிகவும் முக்கியமானது. காலம் கடந்துவிட்டது என்றால் பின்னர் எதுவும் செய்ய முடியாது என்றாகிவிடும்.

தமிழர்கள் உயிரைக் காவு கொள்பவனை யமன் என்று அடையாளப்படுத்திக் கொண்டனர். தமிழர்களைப் பொறுத்து இன்று வரை நடந்த அத்தனை கொலைகள், மரணங்கள் அனைத்தையும் யமன் செய்ததாகவே அடையாளப்படுத்தியுள்ளனர்.

அதனைச் சற்று நுட்பமாக எல்லாம் காலம் என்று சொல்வதன் ஊடாக இனந்தெரியாத கொலைகள் அப்படியே ஆக்கப்பட்டுள்ளன.

எதுவாயினும் காலம் என்ற இயற்கையின் அசைவில் தன் கடமையை ஒழுங்காகச் செய்பவன் யமன் ஒருவனே என்பதால் அவனைக் காலன் என்று நம் தமிழ் முடிவு செய்தது.

காலத்தின் முக்கியத்துவம் குறித்து தமிழ் மொழி மிகவும் அருமையான கருத்தை முன் வைத்துள்ளது.

காலத்தே பயிர் செய் என்று உரைக்கும் நம் தமிழ் மொழி பருவத்தால்… அன்றிப் பழா என்றும் கூறி வைத்துள்ளது.

ஆக, காலம் நன்மைக்கும் தீமைக்கும் பொதுவானது சில விடயங்களுக்கு காலம் கடப்பது நல்லது. இன்னும் சில விடயங்களுக்கு காலம் கடப்பதே ஆபத்தானது.

இந்த வகையில் இலங்கையில் நீடித்து வரும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமல் விடப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் நிலைமை எதிர்முகமாகச் செல்வதற்கே வழிவகுக்கும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வை முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கண்டிருந்தால் இன்று இலங்கைத் திருநாட்டின் உயர்வு நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்திருக்கும்.

என்ன செய்வது காலப்பிழை என்று சொல்லித் தப்பிப்பதை தவிர வேறு வழியேதும் இல்லை.

எது எப்படியாயினும் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது எனது கடமை என்று வெளிப்படையாகக் கூறும் ஜனாதிபதி மைத்திரி அதனை உடனடியாகச் செய்யத் தவறுவாராயின் அவர் அவ்வாறு சொன்னது மட்டும் என்பதையே காலம் எழுதிச் செல்லும்.

ஆகையால் காலம் கடப்பதற்கு இடம் கொடாமல் தான் சொன்னதை ஜனாதிபதி மைத்திரி இக்கணமே செய்தாக வேண்டும்.