பணம் செலுத்தும் கருவி மூலம் திருமண மண்டபத்தில் மொய்பணம் வசூல்

நாட்டில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடுமையான அளவுக்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக, பணத்தை மாற்ற வங்கிகளிலும், பணத்தை எடுக்க ஏ.டி.எம். மையங்கள் முன்பும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.

வெகுவாக வர்த்தகம் முடங்கிய நிலையில், இந்த பணத்தட்டுப்பாடு திருமண நிகழ்வுகளையும் பாதித்துள்ளது. தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஐப்பசி மாதம் திருமண நிகழ்வுகள் அதிகம் நடைபெறும் மாதம் ஆகும்.

ஆனால், கடந்த சில நாட்களாக நிலவும் பணத் தட்டுப்பாட்டால், திருமண விழாக்களில் கூட்டம் குறைவாக காணப்படுகிறது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இதை கண்கூடாகவே பார்க்க முடிந்தது. பல திருமண மண்டபங்களில் சாப்பிடக் கூட ஆள் இல்லாமல், தயாரிக்கப்பட்ட உணவு வீணானது. சில திருமண மண்டபங்களில் இருந்து முதியோர் மற்றும் அனாதை இல்லங்களுக்கு உணவு பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு வழங்கப்பட்டன.

பிரதமர் நரேந்திரமோடி ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ந்தேதி இரவு அறிவித்தார். பொதுவாக, மாத சம்பளம் வாங்குபவர்கள் அனைவரது கைகளிலும் அந்த நேரத்தில் புழங்கியது ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் தான். ஆனால், திடீர் அறிவிப்பால் கையில் வைத்திருந்த செல்லாத அந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் அவர்கள் தவியாய் தவித்தனர்.

இதனால், பொதுமக்கள் பலரால், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. காரணம் பணத்தட்டுப்பாடு தான். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றால், பரிசு பொருள் வழங்குவதைவிட மொய் பணம் கொடுப்பது தான் பலரது வழக்கம்.

ஆனால், ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100 பணம் கையில் போதிய அளவு இல்லாததால், அவர்களால் திருமண வீடுகளுக்கு செல்ல முடியவில்லை. கையில் இருக்கும் ரூ.500, ரூ.1,000 பணத்தை திருமண வீடுகளில் கொடுத்தால், திருமண வீட்டார் நம்மை எவ்வாறு நினைப்பார்கள்? என்று கருதி நிகழ்ச்சியில் பங்கேற்காமல் தவித்தனர்.

பணத்தட்டுப்பாடு காரணமாகத்தான் திருமண மண்டபங்களே வெறிச்சோடி போயின. ஆனால், கோவில்பட்டியில் நேற்று நடந்த திருமணம் ஒன்றில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எளிதாக மொய் பணம் செலுத்துவதற்கு வசதி செய்யப்பட்டிருந்தது. அதாவது, பெரிய கடைகளில் நாம் பொருட்கள் வாங்கிய பிறகு, நமது வங்கிக் கணக்கு டெபிட் கார்ட்டை பயன்படுத்தி ‘சுவைப் மெஷின்’-ல் தேய்த்து பணத்தை வழங்கும் அதே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனால், திருமணத்திற்கு வந்திருந்த மணமக்களின் உறவினர்களும், நண்பர்களும், தங்களது டெபிட் கார்டு மூலம் தாங்கள் விரும்பிய மொய் பணத்தொகையை மகிழ்ச்சியோடு அளித்தனர். இதே முறை பல திருமண நிகழ்வுகளில் நேற்று தமிழகம் முழுவதும் பின்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.