ஆண்டுக்கு ஒரு டாலர் சம்பளம்: டொனால்ட் டிரம்ப் அதிரடி

அமெரிக்காவின் அதிரபாக பதவி வகிப்பவர்களுக்கு விடுமுறைக்கால ஓய்வுடன் கூடிய சம்பளம் மற்றும் ஆண்டு சம்பளமாக 4 லட்சம் டாலர்கள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

நாட்டின் அதிபராக நீங்கள் சம்பளம் வாங்குவீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘இல்லை, நான் சம்பளம் வாங்கப் போவதில்லை. ஆனால், நமது நாட்டின் சட்டப்படி ஒரு டாலராவது சம்பளமாக பெற வேண்டும் என்றுள்ளது. எனவே, ஆண்டுக்கு ஒரு டாலர் மட்டுமே சம்பளமாக பெற்றுக் கொள்வேன். ஆனால், அது (ஒரு டாலர்) என்னவென்றே எனக்கு தெரியாது’ என கூறியுள்ளார்.

மற்ற அதிபர்களைப்போல் ஓய்வுக்காக விடுமுறை எடுக்க திட்டமிட்டுள்ளீர்களா? என்ற கேள்விக்கு, ‘நமக்கு ஏராளமான பணிகள் உள்ளன. மக்களுக்காக அவற்றை நான் செய்ய வேண்டியுள்ளது. அதனால், பெரிய அளவிலான ஓய்வுக்காக விடுமுறை எடுக்கும் திட்டம் ஏதுமில்லை’ என்று அவர் பதிலளித்தார்.