கர்ப்பம் ஆகவில்லை.. உறவினர்கள் கேலி செய்ததால் குழந்தை திருட்டு.. கோவை பெண் வாக்குமூலம்

பச்சிளம் குழந்தை திருடப்பட்டு ஒரு மணி நேரத்தில் அந்தக் குழந்தையை மீட்டு கோவை போலீசார் அதன் தாயிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும், இனிமேல் கர்ப்பம் ஆகமாட்டோம் என்ற விரக்தியில் குழந்தையை திருடிய இளம் பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை புறநகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கருச் சிதைவு செய்துள்ளார். இந்நிலையில், அவருக்கு இந்நாள் வரை மீண்டும் கர்ப்பம் ஆகாமல் இருந்துள்ளார்.

இதனால், அவரது உறவினர்கள் அவரை மனம் நோகும் படி பேசியுள்ளனர். இந்த அவதூறு பேச்சுக்களில் இருந்து விடுபட விரும்பிய அந்தப் பெண் தான் கர்ப்பம் ஆனது போல் கடந்த ஜனவரி மாதம் முதல் நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்ற அந்தப் பெண் ஜோதி என்ற பெண்ணின் பெட் அருகில் நின்றுள்ளார். அப்போது குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு அங்கு வெளியில் சென்று திரும்பி வந்ததாக தெரிகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த பெண் பச்சிளம் குழந்தையுடன் தப்பிச் சென்றுவிட்டார்.

இதுகுறித்து ஜோதி கோவை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் நடத்திய விசாரணையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் ஆட்டோ டிரைவர் அடையாளம் காட்டியதின் பேரில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.

குழந்தையை திருடிச் சென்ற அந்த பெண் வீட்டிற்கு சென்று உறவினர்களிடம் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக கூறி நாடகம் ஆடியிருக்கிறார். குழந்தையை பறி கொடுத்த ஜோதிக்கு 3 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.