மட்டக்களப்பில் பாம்புகளோடு சேர்ந்து வாழும் குடும்பம்!

பாம்பு புற்று மற்றும் பாம்புகளுக்கு மத்தியிலும் தமது அன்றாடா வாழ்க்கையை மட்டக்களப்பு பதுளை வீதியில் உள்ள சர்வோதய நகர் கிராமத்தில் 4 பிள்ளைகளை கொண்ட குடும்பம் வாழ்ந்து வருகின்ற அவலம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

குடும்பத்தில் வறுமை தலைவிரித்தாடிக் கொண்டிருந்தாலும், இந்த உலகத்தில் எப்படியும் வாழ்ந்து காட்டலாம் என்ற தன் நம்பிக்கையுடன் கைக்குழந்தையும் வைத்து கொண்டு, பாம்புகளுக்கு மத்தியில் வாழ்வது என்பது ஒரு பாரிய சவாலாக இருந்தும் அதற்கு எதிர் நீச்சல் போடுகின்றாள் அக்குழந்தையின் தாய்.

உண்மையில் இந்த குழந்தையும் அக்குடும்பமும் செய்த பாவம் தான் என்ன? பல்வேறு அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் சேவைகளை மக்களுக்குச் செய்வதாக விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

ஆனால் அவர்களின் பார்வை இவ்வாறான சாதாரண மக்களின் மீது ஏன்..? படுவதில்லை என அங்கிருக்கின்றவர்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.அண்மையில் வீட்டு திட்டங்கள் சர்வோதய நகருக்கு வந்த போதும் இவர்களுக்கு வீடு வழங்கப்படவில்லை என மனவேதனை அடைந்துள்ளதுடன் இவர்கள் எந்தநேரமும் பாம்புக்கடிக்கு இலக்காக்கலாம் என்ற அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது தொடர்பாக அரசியல் வாதிகளோ அரச அதிகாரிகளோ எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை என்கிறார்கள் அக்குடும்பத்தை சேர்ந்தவர்கள். எமது இந்த மண் வீடு இவர்களது பார்வைக்கு தெரியவில்லையா என்றும் கேள்வி எழுப்புகிறார்கள் ஆதங்கத்துடன்.இந்நிலையில் தற்போது மழை காலம் என்பதால் இந்த குழந்தைகளுக்கு என்ன நேரிடும் என்ற அச்சத்திலும் எதிர் காலம் எவ்வாறு போக போகின்றது என்ற ஒரு குழப்பமான சூழ்நிலையில் தாம் வாழ்ந்து வருகின்றமை குறித்து அவர்கள் அச்சம் வெளியிட்டிருக்கிறார்கள்.

அதிகாரிகள் தங்கள் கஷ்டத்தை கண்டு கொள்ளாமையையிட்டு கவலை கொண்டுள்ள அவர்கள், எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகளை நோக்கி உங்கள் பிள்ளைகளுக்கோ குடும்பத்தினருக்கோ இந்த அவலம் ஏற்பட்டால் பார்த்துக் கொண்டு இருப்பீர்களா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.