சூப்பரான ஐடியா கொடுத்தால் ரூ.5.000 பரிசு

டெல்லியில் மாசுக்களில் அளவு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மேலும், கடுமையான பனிப்புகை மூட்டமும் நீடித்து வருகிறது. இதனால், பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நகரில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

காற்றில் மாசுக்களின் அளவு பாதுகாப்பு வரம்பைவிட அதிகரித்து வருவதால் உடல் நலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க கோரி டில்லியின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மாசுகட்டுப்பாடு குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும், மாசுக்களின் அளவை கட்டுப்படுத்த சூப்பரான ஐடியா கொடுப்பவர்களுக்கு தலா ரூ.5,000 பரிசு வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளிவரவேண்டாம் என்றும் அப்படி வெளிவந்தால் மாஸ்க் அணிந்துகொண்டு செல்லுங்கள் என கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.