பூமிக்கு அடியில் பெட்ரோல் குழாய் பதிக்க எதிர்ப்பு: மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பூமிக்கு அடியில் பெட்ரோல் எடுத்துச் செல்ல சிபிசிஎல் நிறுவனம் குழாய் அமைப்பதைக் கண்டித்து மீனவர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மீனவர் சங்கம் சார்பில் நேற்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் தலைவர் எம்.டி.தயாளன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கடலார், பீட்டர் ராயன் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய தயாளன் கூறியதாவது:

சென்னை துறைமுகத்தில் இருந்து மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (சிபிசிஎல்) வரை பூமிக்கடியில் பெட்ரோல் கொண்டு செல்வதற்காக குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே பூமிக்கடியில் பதிக்கப்பட்ட குழாய்களில் ஓட்டை விழுந்து மிகப் பெரிய ஆபத்துகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். அத்துடன், நீர்வளம் கெட்டு அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிரந்தரமாக மண் வளமும் அழிகிறது.

எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தில் 60 சதவீதம் பங்குதாரராக சீனாவை சேர்க்க சிபிசிஎல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே தரமற்ற பொருட்கள் தயாரிப்பில் உலகளவில் பெயர் போன சீனாவிடமிருந்து குழாய்களை வாங்கி பதித்தால் அது வடசென்னை மக்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.

கடலோர மேலாண்மை விதிகளை மீறி கடல்நீரை மாசுபடுத்தி கடல் வளங்களை அழிக்க சிபிசிஎல் நிறுவனம் நினைக்கிறது. சென்னை துறைமுகம் முதல் மணலி சிபிசிஎல் நிறுவனம் வரை 17 கி.மீ. தூரத்துக்கு குழாய் பதிக்க ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவாகும். இதனால் மக்கள் வரிப்பணம் விரயமாவதோடு மீனவர்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக அமையும். எனவே சிபிசிஎல் நிறுவனம் இந்தக் குழாய் பதிக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்.

இவ்வாறு தயாளன் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மீனவர் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி, இளை ஞர் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.