விரல் நுனியின் மகத்துவம்

மனிதனுக்கு விரல் நுனியின் மகத்துவம் தெரிவதில்லை. விரல் நுனியை மிக சாதரணமாக நினைக்கிறார்கள். ஆனால், அந்த விரல் நுனியை மட்டுமே நம்பி தினமும் பல காரியங்களை நாம் செய்து வருகிறோம். முக்கியமாக பார்வையற்றவர்கள், அரிசியா? உமியா? என்று தொட்டுப் பார்த்து கண்டுபிடிப்பது, விரல் நுனியில் உள்ள அடர்த்தியான கொழுப்பு அறைகள் நிரம்பிய திசுக்களும், அவற்றை போர்த்தியுள்ள பிரத்யேகமான தோலும் சேர்ந்து தான் இவற்றை செய்கின்றன.

விரல் முனை எலும்பு நகத்தின் நுனி வரை நீளுவதில்லை. கிட்டத்தட்ட நகத்தின் பாதி பகுதியில் அது நின்று விடுகிறது. அந்த எலும்புக்கு மேல் பகுதியில் தான் குஷன் போன்ற திசுக்கள் உள்ளன. இவற்றின் தனித்தன்மையால் தான் நாம் வேகமாக ரூபாய் நோட்டுகளை எண்ண முடிகிறது. கிட்டார் போன்ற இசைக்கருவிகளை மீட்ட முடிகிறது.

நாம் வளர, வளர, நம் விரல் நுனியின் செயல் திறனும் வளர்ந்து கொண்டே இருக்கும். சிறுவயதில் சாக்பீஸ் கொண்டு எழுதும் போது, எவ்வளவு முறை சாக்பீஸை உடைத்திருப்போம். ஆனால், பெரியவர்களாக ஆன பிறகு சாக்பீசால் சரளமாக தொடர்ந்து எழுத முடிகிறதே..! அது எப்படி?

விரல் நுனியின் செயல் திறன் வளர்ச்சியால், திறமை வளர்ந்தாலும் விரல் நுனியின் உருவம் பெரிதாவதில்லை. அப்படி பெரிதாகவும் கூடாது. அதிகம் புகைப்பவர்கள், மது அருந்துபவர்களின் விரல் நுனிகள் திடீரென்று பெரிதாவது இயல்பு. அதேபோல் கல்லீரல் கோளாறுகளால் விரல் நுனிகள் அசாதாரணமாக பெரிதாவது உண்டு.

ஒவ்வொரு விரல் நுனியும் உணர்ச்சி மிகுந்தவைதான். இவற்றில் மிக அதிகமான ரத்த ஓட்டம் உண்டு. அதனால்தான் ரத்த பரிசோதனைக்கு பல நேரங்களில் விரல் நுனியில் இருந்தே ரத்தம் எடுக்கிறார்கள். தவிர உணர்வு நரம்புகளும் இங்கு குவிந்துள்ளன.

கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல்களின் நுனிகள் மிகவும் அதிக அளவில் உணர்சிகளை மூளைக்கு அனுப்பும் சக்தி கொண்டவை. கண்களை மூடிக்கொண்டு நாணயத்தின் ஒரு பக்கத்தை விரல் நுனியால் தடவிப் பார்த்து அது பூவா, தலையா என்று சரியாக் சொல்ல முடிவது இதனால்தான்.

விரல் நுனியில் துருப் பிடித்த ஊசியோ, முள்ளோ குத்தி ‘செப்டிக்‘ ஆகி ஒரு பழுத்த இலந்தம் பழம் போல் ஆகி விடுகிறது. அத்துடன் விண்ணென்று தெறிக்கும் வலியும் சேர்ந்து கொள்ளும். இதை அகற்ற உடனடியாக ஆன்டிசெப்டிக் மருந்துகளை அளித்து, பிறகு சிறிய அறுவை சிகிச்சை மூலம் அங்குள்ள சீலை வெளியேற்றி விட வேண்டும். இல்லாவிட்டால் விரல் நுனி தனது உருவத்தையும், மெத்தென்ற தன்மையையும் இழக்க நேரிடும். எனவே விரல் நுனி இன்றியமையாதது என்பது புரிகிறதல்லவா!