இளையராஜா எதிர்வரும் பொங்கலன்று யாழ்ப்பாணத்தில்!!!

தென்னிந்தியாவின் புகழ்பூத்த இசைச் சக்கரவர்த்தி இசைஞானி இளையராஜா அவர்கள் எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தில் யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக அவரது இசைக்குழுவினருடன் வருகை தரவிருக்கின்றார்.

இந்த இசைநிகழ்ச்சியில் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற பாடகர்களான மனோ,சித்திரா, கார்த்திக், மற்றும் ஹரிச்சரண் ஆகியோர் கலந்து கொண்டு இசை ரசிகர்களை பரவசத்தில் மூழ்கடிக்க இருக்கின்றனர் என்று தெரியவருகின்றது.

இசைஞானி இளையராஜாவுடன் இந்த இசை விழாவில் மொத்தமாக இசைக்கருவிகளை மீட்டும் கலைஞர்கள் 65 பேர் பங்குபற்றவிருக்கின்றனர். இவ்வாறு வரவுள்ள இசைக்கலைஞர்களில் 15 பேர் வயலின் இசைக்கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இசைஞானி இளையராஜா அவர்கள் எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள பிரமாண்டமான இசை மேடையில் அவரது இசையில் உருவாகி அவரே பாடிய அருமையான பாடல்களைப் பாடி இலங்கை வாழ் ரசிகர்களை பரவசப்படுத்தவுள்ளார்.

நீண்டகாலமாக யாழ்ப்பாணத்திற்கு வந்து இங்குள்ள தமிழ் மக்களைச் சந்தித்து அவர்கள் மத்தியில் எனது இசை நிகழ்ச்சியை செய்ய வேண்டும் என்ற எனது எண்ணம் இம்முறை நிறைவேறும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதையிட்டு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்,’

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளவர்களிடம், இசைஞானி இளையராஜா அவர்கள் தெரிவித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறு இருந்த போதும் முன்னாள் போராளிகள், அவர்களின் எஞ்சிய குடும்ப உறுப்பினர்களின் வறுமையின் கொடூரம் பற்றி யாரும் சிந்திப்பதில்லை என்று பலரும் விசனப்பட்டுக்கொள்வது வழமையான ஒன்றாகி விட்டது.