வீடு திரும்புவது பற்றி முதலமைச்சரே தீர்மானிப்பார்: அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைவர் தகவல்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா, உடல்நல குறைவின் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி முதல் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், அப்பல்லோ ஆஸ்பத்திரியின் மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர் டி.வி.தேவராஜன் எழுதிய மருத்துவ புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக அப்பல்லோ ஆஸ்பத்திரியின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். முதல் பிரதியை மூத்த மருத்துவ சிகிச்சை நிபுணரும், பேராசிரியருமான திருவேங்கடம் பெற்றுக்கொண்டார்.

விழா முடிந்தபின் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து டாக்டர் பிரதாப் சி.ரெட்டியிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு என்ன நடக்கிறது என்பது நன்றாக தெரியும். கடவுளுக்கு மிக்க நன்றி. முதல்- அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் குணம் அடைந்து வருகிறார். நான் மிகத் தெளிவாக சொல்ல விரும்புவது என்னவென்றால், அவர் மிகவும் மனநிறைவோடு இருக்கிறார். மன நிறைவு என்பதற்கு நான் சொல்லும் பொருள் அவர் முழுமையாக குணம் அடைந்துவிட்டார்.

தன்னை சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை அவர் நன்றாக அறிந்து வைத்து இருக்கிறார். அவரும் நாங்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைவது என்னவென்றால், அவர் நன்றாக குணம் அடைந்துள்ளதுடன், தான் அடைந்துள்ள முன்னேற்றத்தை அவரே கண்காணிக்கிறார் என்பதுதான்.

ஒரு டாக்டர் அல்ல, ஒரு ஆஸ்பத்திரி அல்ல, ஒரு டாக்டர் குழு அல்ல, டாக்டர்களின் ஒருங்கிணைந்த முயற்சி தான், நம் அன்புக்குரிய தமிழக முதல்-அமைச்சரின் உடல் நிலையை சிறப்பான முன்னேற்றம் அடைய வைத்து உள்ளது. ஆஸ்பத்திரி செய்தது ஒரு பங்கு என்றால், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக் கான மக்கள் அவர் குணம் அடைய வேண்டும் என பிரார்த்தனை செய்தது மறுபக்கம்.

அந்த பிரார்த்தனைகள் அவரை பூரண குணம் அடைய வைத்து உள்ளது. பிரார்த்தனை மிகவும் உதவிகரமாக இருந்தது. என்ன நடக்கிறது, என்பது ஜெயலலிதாவுக்கு நன்றாக தெரியும். தனக்கு என்ன வேண்டும் என்பதை அவரே கேட்கிறார்.

அவர் எப்போது வீடு திரும்புவார் என எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். அவரும் கூட தான் எப்போது வீடு திரும்புவது என்பது பற்றியும், மக்கள் தனக்கு கொடுத்த பொறுப்பை எப்போது நிறைவேற்றலாம் என்றும் ஆசையோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

அவர் உடல்நிலை அடைந்த முன்னேற்றம் குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். டாக்டர்கள் குழு மட்டுமல்ல, நர்சுகள் மற்றும் அனைத்து பணியாளர்களும் தங்கள் கடமைகளை சிறப்பாக செய்ததால் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அவருக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

அவர் எப்போது சாதாரண வார்டுக்கு போவார்? எப்போது வீடு திரும்புவார்? என்பது பற்றியெல்லாம் அவர் தான் முடிவு செய்வார். அவரை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். தான் எப்போது வீடு திரும்ப வேண்டும் என்பதை அவரே விரைவில் எங்களிடம் தெரிவிப்பார்.

இதுதான் அவரின் மனதில் முதன்மையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். வீட்டுக்கு திரும்புவது சாதாரண விஷயம், அதற்காக நாங்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறோம்.

அவருக்கு அளிக்கப்பட்ட மிக முக்கியமான சிகிச்சைகள் எல்லாம் மிகவும் வெற்றிகரமான பயனை தந்து உள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது உதவியாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
டாக்டர்களிடமும், நர்சுகளிடமும் அவர்கள் என்ன செய்ய வேண்டும், தான் என்ன செய்ய வேண்டும் என ஜெயலலிதாவே கூறுகிறார். அவர் நன்றாக இருக்கிறார் என்பதை மிகவும் மீண்டும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

முதலாவது அனைவரது பிரார்த்தனை, அடுத்தது அப்பல்லோ ஆஸ்பத்திரி குழு, எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் குழு, இங்கிலாந்து டாக்டர் ரிச்சர்டு பீலே ஆகியோர் அளித்த நல்ல சிகிச்சையால் அவர் வேகமாக குணம் அடைய முடிந்தது. அவர் உங்களை எல்லாம் பார்க்கப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இவ்வாறு டாக்டர் பிரதாப் சி.ரெட்டி கூறினார்.