குழந்தை செல்வம் தரும் சந்தான லட்சுமி விரதம்

குழந்தை பாக்கியத்தை இயற்கையிலே வாய்க்கப்பெறாத பெண்கள் சந்தான லட்சுமி விரதத்தையும் சந்தான கிருஷ்ண விரதத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.

வளர்பிறையும் நல்ல திதியும் அமைந்த நல்ல ஞாயிற்றுக்கிழமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வீட்டில் ஓர் அறையில் கிழக்கு முகமாக பீடமமைத்து, நெல்லைப் பரப்ப வேண்டும். அதன் மீது ஒரு தட்டை வைக்க வேண்டும். அதில் பச்சரிசி பரப்ப வேண்டும். பச்சரிசித் தட்டில் கலசம் வைத்து, கலசத்தில் முழுவதும் நீர் ஊற்றி மாவிலையும் தேங்காயும் வைக்க வேண்டும். முகமில்லாமல் ஒரு வட்டமாய் இருக்கும் வாழைப்பூ குத்துவிளக்கைக் கலசத்திற்கு அருகில் வைக்க வேண்டும்.

சந்தானலட்சுமி, தானியலட்சுமி, சந்தான கிருஷ்ணன் ஆகிய தெய்வ பூஜைக்கு இந்த விளக்கைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பது சாஸ்திர விதி. ஞாயிற்றுக்கிழமை சூரியன் தோன்றுவதற்கு முன், இவற்றைத் தயாராக வைத்திருந்து, சூரியன் தோன்றும் வேளையில் விநாயகர் பூஜையைத் தொடங்க வேண்டும்.

கலச பூஜையைத் தனலட்சுமி ஸ்தோத்திரங்களைச் சொல்லி, கற்பூர தீப தூபம் காட்டி வணங்க வேண்டும். திருவிளக்குப் பூஜையை அஷ்டோத்ர ஈத நாமாவளி சொல்லிப் பூஜை செய்து வணங்க வேண்டும். தனலட்சுமி அஷ்டோத்திர சத நாமாவளி சொல்லிக் கலசத்தைப் பூஜை செய்ய வேண்டும்.

பூஜை முடிந்தவுடன், கணவனும், மனைவியும் ஒன்றாகத் தட்டைப்பிடித்துக் கற்பூர தீபாராதனை காட்டி வணங்க வேண்டும். இருவரும் சேர்ந்தே உடலின் எட்டு உறுப்புகளும் தரையில்படும்படி (அஷ்டாங்க) ஆணும் ஆறு உறுப்புகளும் தரையில் படும்படி பெண்ணும் நமஸ்காரம் செய்ய வேண்டும்.

கணவன்-மனைவி இருவர் மட்டுமே செய்யும் இந்த பூஜை முடிந்ததும், அக்கம் பக்கமுள்ள சின்னஞ்சிறு குழந்தைகளை அழைத்துவரச் சொல்லி, பூஜை பீடத்தைச் சுற்றி அமரச் சொல்ல வேண்டும். பின்பு, மீண்டும் கலச பூஜை, கற்பூர தூப தீபம் காட்டி வணங்கிவிட்டு, பிரசாதங்களுள் பசுவின் பால், தேன், இளநீர், எள் உருண்டை ஆகியவை தவிர மற்றவற்றைக் குழந்தைகளுக்கத் தரவேண்டும்.

கணவனும், மனைவியும், எள் உருண்டைகளை உண்டு விட்டு, பால், தேன், இளநீர் ஆகியன கலந்த சந்தான பானத்தை அருந்த வேண்டும்.

இந்த முறைப்படி, கரு தோன்றும் வரை பதினொரு வாரம், பதினாறு வாரம், இருபத்தொரு வாரம், நாற்பது வாரம், நாற்பத்தெட்டு வாரம் என விரதம் இருக்கலாம். ஒரே வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தனலட்சுமி விரதத்தையும் புதன்கிழமை சந்தானகிருஷ்ண விரதத்தையும் கடைபிடிக்கலாம்.