மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்பட்டால் மாத்திரமே ஜிஎஸ்பி வரிச்சலுகை!

மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் மாத்திரமே, சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கு தலைமை தாங்கிய ஜீன் லம்பெர்ட் இங்கு கருத்து வெளியிடுகையில்,

‘சிறிலங்காவில் தேர்தல்களின் பின்னர் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக சிவில் அமைப்புக்களும் அரசியல் தரப்புக்களும் கூறுகின்றன. எனினும், உண்மையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மக்கள் உணரக்கூடியதாக இருக்கவேண்டும்.

ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை மீளப் பெற்றுக் கொள்வதற்கு 27 அனைத்துலக பிரகடனங்களை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.

இவற்றில் 19 பிரகடனங்கள் மனித உரிமைகள் சம்பந்தப்பட்டவை. 6 பிரகடனங்கள் தொழிலாளர் விவகாரங்களுடனும், இரண்டு பிரகடனங்கள், சுற்றாடல் விவகாரங்களுடனும் தொடர்புடையவை.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்பட்டு அனைத்துலக தரத்திலான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைகளை சிறிலங்கா பூர்த்தி செய்ய வேண்டும்.

ஜிஎஸ்பி சலுகை குறித்து தொடர்சியான பரந்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் முன்னேற்றம் காணப்படுகிறது.

இருந்தபோதும் சிறிலங்காவின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வதாக ஐரோப்பிய ஆணைக்குழு அறிவித்த பின்னரே அது ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்கு விடப்படும்.

எமது பயணத்தின் போது பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், வடமாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களையும், சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடினோம்.

சிறிலங்காவில் புலப்படக்கூடிய மாற்றங்கள் தென்படுகின்ற போதும் இன்னும் பல விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டியிருக்கிறது.

வடமாகாண முதலமைச்சருடனான சந்திப்பில் வடக்கில் இராணுவ மயத்தை குறைத்தல், காணிகளை விடுவித்தல், சிவில் செயற்பாடுகளில் காவல்துறையினரின் தலையீடுகளைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து சுட்டிக்காட்டியிருந்தார்.

காணாமல்போனவர்கள் தொடர்பான பணியகம் அமைத்திருக்கும் விடயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. நல்லிணக்க செயற்பாடுகள் சரியான பாதையில் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானது.” என்று தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சிறிலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்,ருங் லாய் மார்கே,

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைக்கு சிறிலங்கா அரசாங்கம் விண்ணப்பித்திருக்கும் நிலையில் இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகிறது.

விண்ணப்பித்து 8 தொடக்கம் 10 மாதங்கள் கழித்தே முடிவு எடுக்கப்படும். கடந்த ஜூலையில் சிறிலங்கா இதற்கு விண்ணப்பித்தது.

எனவே, அடுத்த ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி இந்தச் சலுகையை வழங்குவதா-இல்லையா என ஐரோப்பிய ஆணைக்குழு தீர்மானிக்கும் என தெரிவித்தார்.