என்னைத் திட்டுவோர் எனது படத்தைப் பயன்படுத்தியே நாடாளுமன்றம் சென்றார்கள் – மஹிந்த

இன்று என்னைத் திட்டுவோர் எனது படத்தைப் பயன்படுத்தியே நாடாளுமன்றம் சென்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

என்னைப் பற்றி குறை சொல்லும் நபர்கள் கடந்தகாலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது எனது 18 அடி கட்அவுட்டை பயன்படுத்தியிருந்தார்கள்.

எனது பெயரையும், படத்தையும் பயன்படுத்தியே அவர்கள் சுதந்திரக் கட்சியில் பதவிகளைப் பெற்றுக்கொண்டார்கள். இன்று அவர்களுக்கு என்னை நினைவில்லை.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நான் டீல் போடவில்லை. அவர்களே போட்டுள்ளார்கள். உண்மையான நிலைமைகளை நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

கள்வன் கள்வன் என என்னை குற்றம் சுமத்துவோர் இன்று ரணிலின் மடியில் இருக்கின்றார்கள். இந்த உண்மையான நிலைமை கடவுளுக்கு தெரியும்.

சேறு பூசுதல் அவமரியாதை செய்தல் எந்த நாளும் செய்ய முடியாது. என்ன நடக்கின்றது என்பதனை பார்த்துக்கொண்டிருக்கின்றோம் என மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.