சுவிஸில் வேலை தருகிறேன் எனக்கூறி விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 80 பெண்கள்

சுவிட்சர்லாந்து நாட்டில் வேலை தருகிறேன் எனக்கூறி அழைத்து வரப்பட்ட 80 பெண்களை மிரட்டி விபச்சாரத்தில் தள்ளப்பட்டுள்ள சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸில் உள்ள பேர்ன் நகரில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 57 வயதான பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார்.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த இவர் தாய்லாந்து நாட்டில் வறுமையில் வாடும் ஏழைப்பெண்களை குறிவைத்து ஒரு அதிரடி திட்டத்தை தீட்டியுள்ளார்.

’சுவிஸில் கை நிறைய சம்பளத்தில் வேலை ஏற்பாடு செய்து தருவதாகவும், விமான போக்குவரத்து செலவுகளை தாங்களே ஏற்றுக்கொள்வதாக’ ஆசை வார்த்தை கூறி பெண்களை சுவிஸ் நாட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இதேபோல், கடந்த 2011ம் ஆண்டு முதல் சுமார் 80க்கும் மேற்பட்ட பெண்களை அழைத்து வந்து மிரட்டி அவர்களை விபச்சாரத்தில் தள்ளியுள்ளார்.

இதுமட்டுமில்லாமல், இப்பெண்கள் மூலம் கிடைத்த வருமானத்தில் சுமார் 30,000 பிராங்க் வரை போக்குவரத்து செலவுகளுக்காக வசூலித்துள்ளார்.

மேலும், எவ்வித தகவல் கொடுக்காமல் வெளியில் எங்கும் செல்லக்கூடாது என பெண்களை அவர் மிரட்டி கட்டுப்பாட்டில் வைத்து வந்துள்ளார்.

ஆனால், இவ்விவகாரம் ரகசியமாக வெளியானதை தொடர்ந்து 57 வயதான பெண்ணை கடந்த 2014ம் ஆண்டு பொலிசார் கைது செய்தனர்.

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் மீதான விசாரணை முடிவடைந்து நிலையில், இவ்விவகாரம் தொடர்பான தகவல்களை பொலிசார் முதன் முதலாக வெளியிட்டுள்ளனர்.

மேலும், பெண் மீதான குற்றம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் நீதிபதி தீர்ப்பளிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.