இன்று ஜனாதிபதியை சந்திக்கும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடன் நடந்த கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கீரிமலையில் அமைக்கப்பட்ட 100 வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.

கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோரை அவர் சந்திக்கவுள்ளதாகவும், அவர்களின் வீடுகளுக்குச் செல்லவுள்ளதாகவும் ஊகங்கள் வெளியாகியிருந்தன.

அதேவேளை, மாணவர்களின் படுகொலைக்கு நீதி வழங்குமாறு கோருவதற்கு ஜனாதிபதி சந்திக்க மாணவர்களும் அனுமதி கோரியிருந்தனர்.

எனினும் மாணவர்களின் இந்தக் கோரிக்கைக்கு எந்தப் பதிலும் அளிக்கப்படாத நிலையில், நேற்றுக்காலை யாழ்.பல்கலைக்கழக நுழைவாயிலை மூடி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்.பல்கலைக்கழக நிர்வாகச் செயற்பாடுகளை முடக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருந்த நிலையில், அமைச்சர் சுவாமிநாதன், மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருடன் பேச்சுக்களை நடத்த சென்றிருந்தார்.

அமைச்சர் சுவாமிநாதனுடன் நடத்திய பேச்சுக்களின் போது, இன்று பிற்பகல் 12.30 மணியளவில் ஜனாதிபதி கொழும்பில் மாணவர்கள் சந்திப்பதற்கு ஒழுங்கு செய்து தருவதாக உறுதி அளிக்கப்பட்டது.

இதையெடுத்து யாழ். பல்கலைக்கழக நிர்வாக முடக்கப் போராட்டத்தை மாணவர்கள் நேற்று பிற்பகல் கைவிட்டமை குறிப்பிடத்தக்கது.