மோசடியில் ஈடுபட்ட போலி மருத்துவர்: கத்தையாக பணத்தை இழந்த மூதாட்டி

சுவிட்சர்லாந்தில் போலி மருத்துவர் ஒருவரது பேச்சை நம்பி மூதாட்டி ஒருவர் கத்தை கத்தையாக பணத்தை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Vaud பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியில் குடியிருந்து வருபவர் 85 வயதான நவோமி. இவருக்கு கடுமையான வலியுடன் கூடிய மூட்டு வாதம் இருந்து வந்துள்ளது.

ஒரு நாள் இவர் தமது மின்னஞ்சல்களை சோதனையிட்டு வந்தபோது குறித்த நோய்க்கான மருத்துவர் ஒருவரது முகவரி உள்ளிட்ட தகவல்களுடன் மின்னஞ்சல் ஒன்று இவரது கண்ணுக்கு தென்பட்டது.

முதாட்டி நவோமி உடனடியாக தொலைப்பேசியில் குறித்த மருத்துவரை தொடர்புகொண்டு தமது நோய் குறித்து விளக்கமாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அடுத்த நாள் அந்த சிறப்பு மருத்துவர் மூதாட்டியின் வீட்டிற்கு வந்து அவர் எடுத்து வந்த அரிய வகை தைலத்தால் மூதாட்டியின் கால்கள், கை மற்றும் மூட்டு பகுதிகளில் விரிவாக மசாஜ் செய்துள்ளார். இதற்கு கட்டணமாக மூதாட்டியிடம் இருந்து 200 பிராங்க் பெற்று சென்றுள்ளார்.

ஒரு நாள் கடந்து மீண்டும் அடுத்த நாள் மூதாட்டியின் வீட்டுக்கு வந்த அந்த மருத்துவர் கட்டணமாக 600 பிராங்க் வேண்டுமென்று கேட்டுள்ளார்.

நாளுக்கு நாள் கட்டணம் அதிகரிப்பதை உணர்ந்த மூதாட்டி இதுகுறித்து விசாரித்தபோது, அந்த மருத்துவர் மூதாட்டிக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில், உங்களை முழுமையாக குணப்படுத்த வேண்டியது எனது பொறுப்பு என பேசியுள்ளார்.

மூதாட்டிக்கு தனது நோய் குணமானால் போதும் என்ற ஒரே எண்ணமே இருந்தது. அதனால் குறித்த மருத்துவரின் கட்டண அதிகரிப்பு குறித்து அலட்டாமல் இருந்தார்.

இந்த நிலையில் 5-வது முறையாக மூதாட்டியின் வீட்டிற்கு வந்த அந்த மருத்துவர் கட்டணமாக 2000 பிராங்க் வேண்டும் என்று கேட்டு பெற்றுள்ளார். தொடர்ந்து வந்த நாளில் அது 6000 பிராங்க் என்றானது.

இதனிடையே ஒரு நாள் பணம் எடுக்கும் பொருட்டு வங்கியில் சென்ற நவோமிக்கு அங்குள்ள காசாளரின் எச்சரிக்கை ஒரு கணம் சிந்திக்க வைத்தது. அது நாள் வரை அந்த சிறப்பு மருத்துவருக்கு 8900 பிராங்க் கட்டணமாக அளித்திருப்பதையும் ஆனால் தமது மூட்டு வாதம் அதே நிலையில் இருப்பதையும் உணர்ந்தார்.

உடனடியாக தமது உறவினர் ஒருவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட நவோமி நடந்தவற்றை விலாவாரியாக ஒப்புவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கு புகார் தெரிவித்த உறவினர்கள், பொலிஸாரின் திட்டப்படி குறித்த மருத்துவரை மீண்டும் ஒரு முறை வந்து சிகிச்சை அளிக்க மூதாட்டி கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து மூதாட்டியின் வீட்டிற்கு வந்த அந்த மருத்துவரை பொலிஸார் பிடிகூடினர். அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் போலி மருத்துவர் என்பதும், அவர் பயன்படுத்திய தைலம் உள்ளிட்டவை அவரே உருவாக்கியவை எனவும் தெரிய வந்தது.