பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 15 பேர் கைது!

இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களில் நேரடி தொடர்புடையதாகத் தேடப்பட்டுவந்த 15 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் நேற்று (14) முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது சுமார் 27,654 பேரிடம் சோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 15 பேர் குற்றச் செயல்களில் நேரடியாக ஈடுபட்டிருந்தமையால் கைது செய்யப்பட்டனர்.

மேலும் 674 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 220 பேரையும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 155 பேரையும் காவல்துறை இதன்போது கைதுசெய்துள்ளது.