பெற்ற பிள்ளையை விற்க முயன்ற தாய் தொடர்பில் வெளியான மேலும் பல தகவல்கள்!

பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையை 75 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்றதாக கூறப்படும் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு 7 வருட கடுழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் நேற்று (05) தீர்ப்பளித்துள்ளது.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய்க்கு எதிராக 20 ஆயிரம் ரூபா அபராதமும், அபராதம் செலுத்தவில்லை என்றால் மேலும் 6 மாத காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய் தனது கணவருடன் இணைந்து கருக்கலைப்பு நிலையம் ஒன்றை சட்டவிரோதமாக நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், மூன்று பிள்ளைகளின் தாயும் அவரது கணவரும் கருக்கலைப்பு செய்வதற்காக அந்நிலையத்திற்கு வருகை தந்த பெண் ஒருவரை கருக்கலைப்பு செய்யாமல் குழந்தையை பெற்றெடுத்து பணத்திற்கு விற்பனை செய்ய தூண்டியுள்ளனர்.

அந்த பெண், குழந்தையை பெற்றெடுத்த பின்னர் மூன்று பிள்ளைகளின் தாய், பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையை 75 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குற்றச்சாட்டப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய்க்கு எதிராக முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை அனைத்தும் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 7 வருட கடுழிய சிறைத்தண்டனை விதித்து நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.

இதேவேளை குற்றம் சாட்டப்பட்டவர் செய்த குற்றம் முழு மனித இனத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு மனிதாபிமானமற்ற செயல் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.