கலைஞர்கள், ஊடகவியலாளர்களுக்கு புதிய வீடு

எமது சமூகத்தின் கலாசார செழுமைக்கு சிறப்பான பங்களிப்பைச் செய்யும் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (16) காலை பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

சீன மக்கள் குடியரசின் உதவியுடன் 1996 வீடுகள் கட்டப்படுவதாகவும், அதில் கொட்டாவ, பலத்துருவத்தை பகுதியில் 108 வீட்டு அலகுகளை கொண்ட மாடி வீட்டு தொகுதி எமது சமுகத்தின் கலாசார செழுமைக்கு பங்களித்த கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கென ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது மிக விரைவில் நிர்மாணிக்கப்படும் என்று எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.