தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான இளங்கோவன் 75 இன்று (டிச.14) காலமானார்.
அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த இளங்கோவனுக்கு கடந்த மாதம் இறுதியில் உடல் நலம் குறைந்தது. காய்ச்சல் பாதிப்பு மற்றும் சளி தொல்லையால், சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைகள் தொடர்ந்த நிலையில், அவருக்கு, நுரையீரலில் சளி தொற்று அதிமாகி, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் இன்று இறந்தார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்; இளங்கோவன் மறைவு அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் வேதனையை தருகிறது என கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநில கவர்னர் ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்; ‘பொது வாழ்க்கையில் நேர்மையை கடைப்பிடித்து, தான் சார்ந்த இயக்கத்தின் மீது ஆழ்ந்த மரியாதையும், நம்பிக்கையும் கொண்டிருந்தார்,’ என புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும் எதிர்கட்சி தலைவர் ராகுல், காங்., தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று இளங்கோவன் உடல் நலம் குறித்து நேரில் சந்தித்து விசாரித்தார்.