வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் மருத்துவர்கள் உட்பட 73 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் புகுந்து கடந்த ஆண்டு அக்., 7ல் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை நோக்கி, ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் நேற்று ‘ட்ரோன்’ தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாலஸ்தீனத்தின் காசா நகரின் மீதும் லெபனான் தலைநகர் பெய்ரூட் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி திட்டமிட்டுள்ளது.
வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லாஹியா பகுதியில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மருத்துவர்கள் உட்பட குறைந்தது 73 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2 வாரத்தில் மட்டும் 400 பேர் வரை இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. லெபனானில் பெய்ரூட் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் அங்குள்ள மக்களை வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.