கசப்பே இல்லாமல் பாகற்காய் வறுவல்!

அதிகமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட பாகற்காயை அதன் கசப்பு தன்மை தெரியாமல் வறுவல் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கசப்பு சுவையைக் கொண்ட பாகற்காயை குழந்தைகள் பெரும்பாலும் ஒதுக்கி வைத்துவிடுவார்கள். சில பெரியவர்களும் பாகற்காய் என்றாலே முகம் சுழிக்கவும் செய்கின்றனர்.

ஆனால் பாகற்காய் வயிற்றிலுள்ள குடல் புழுக்களை நீக்குவதற்கும், சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகவும் இருக்கின்றது.

இதனை வறுவல் செய்வது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
ஊற வைப்பதற்கு

பாவக்காய் – 300 கிராம்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை – 1 கொத்து

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

மல்லித் தூள் – 1 1/2 டீஸ்பூன்

செய்முறை
முதலில் பாவக்காயின் விதைகளை நீக்கிவிட்டு, மெல்லிய நீள துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின் நறுக்கிய பாவக்காயுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கைகளால் பிசைந்து விட்டு, மூடி வைத்து 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

1/2 மணிநேரம் கழித்து, மூடியைத் திறந்து, பாவக்காயை பிழிந்து, அதில் உள்ள நீரை வெளியேற்ற வேண்டும். இதனால் அதில் உள்ள கசப்புத்தன்மை குறையும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

அதன் பின் அதில் பாவக்காயை சேர்த்து நன்கு கிளறி விட்டு மூடி வைத்து 10 நிமிடம் பாவக்காயை வேக வைக்க வேண்டும்.

பாவக்காய் நன்கு வெந்ததும், அதில் மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு, 15 நிமிடம் நன்கு மொறுமொறுவென்று வரும் வரை ப்ரை செய்து இறக்கினால், சுவையான பாவக்காய் வறுவல் தயார்.