குட்நைட் திரைப்பட திரை விமர்சனம்

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் குட் நைட். மணிகண்டன், மீதா, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், ரேச்சல் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கவனம் ஈர்த்துள்ள இப்படம் எந்த அளவிற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..

கதைக்களம்
அம்மா, அக்கா, தங்கை, மாமா என சந்தாஷமாக கதாநாயகன் மணிகண்டன் வாழ்ந்து வருகிறார். மற்றொரு புறம் கதாநாயகி மீதா, தன்னை ஒரு துரதிஷ்டசாலி என நினைத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார். இவர் குடியிருக்கும் வாடகை வீட்டின் உரிமையாளர்கள் பாலாஜி சக்திவேல் மற்றும் அவருடைய மனைவி தான் மீதாவை பார்த்துக்கொள்கிறார்கள்.

பல விஷயங்களில் மணிகண்டன் மகிழ்ச்சியாக இருந்தாலும் தூங்கும் போது அவர் விடும் குறட்டையால் பல இடங்களில் அசிங்கப்படுத்தப்படுகிறார். இந்த ஒரு விஷயம் மட்டும் அவருடைய நிம்மதியை கெடுத்துக்கொண்டே இருக்கிறது.

இந்த சமயத்தில் கதாநாயகி மீதாவை சந்திக்கும் மணிகண்டன் அவர் மீது காதலில் விழுகிறார். அனைவரும் கலந்துபேசி இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணத்திற்கு பின் மணிகண்டன் விடும் குறட்டையால் என்னென்னவெல்லாம் நடக்கிறது? இருவருக்கும் இடையே உள்ள உறவு என்னவானது? என்பதே படத்தின் மீதி கதை..

படத்தை பற்றிய அலசல்
கதாநாயகன் மணிகண்டன் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக குறட்டைவிடும் காட்சியிலும், அதனால் தனக்கு ஏற்படும் துன்பத்தை தாங்கிக்கொள்ளும் காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார்.

ஹீரோவிற்கு எந்த விதத்திலும் குறையாத நடிப்பை கதாநாயகி மீதா சிறப்பாக கொடுத்துள்ளார். முதலில், தான் ஒரு துரதிஷ்டசாலி என என்ணி வாழ்ந்து வந்து, பின் மணிகண்டன் தனது வாழ்க்கையில் வந்தபின் மகிழ்ச்சியையும் அதன்பின் வரும் வலிகளையும் அழகாக தனது நடிப்பில் காட்டியுள்ளார்.

ரமேஷ் திலக் மற்றும் ரேச்சல் இருவரும் படத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே வரும் காட்சிகள் மக்கள் வெகுவாக கவருகிறது.

பாலாஜி சக்திவேல் மற்றும் அவருடைய மனைவியாக வருபவர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார்கள். மற்றபடி அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தை சரியாக செய்துள்ளனர். அதுவே இப்படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் எடுத்துக்கொண்ட கதைக்களம் புதுமை. ஒருவரின் குறட்டையால் அவருடைய வாழ்க்கை எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது. அதை நிறுத்த அவர் எடுக்கும் முயற்சிகள் என்னென்ன. குறட்டையால் சுற்றி இருப்பவர்கள் அவரைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்.

குறிப்பாக அவரை எப்படி பட்டப்பெயர் வைத்து அழைப்பார்கள், அதனால் குறட்டை விடுபவர்களின் மனநிலைமை எப்படி இருக்கும் என்பது வரை அழகாக திரைக்கதையில் காட்டியுள்ளார். அதற்கு தனி பாராட்டு.

குறட்டை விடும் கணவரை சகித்துக்கொண்டு வாழாமல், அந்த குறட்டை அந்த பெண்ணுக்கு குறையாகவே தெரியவில்லை என்பது போல் கதாப்பாத்திரத்தை வடிவமைத்த விதம் தான் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்.

அதிலும் ஒரு நாய் குட்டியை வைத்து ஹீரோ, ஹீரோயின் இருவருக்கும் இடையே வரும் முக்கிய காட்சி ஒன்று மனதை தொடுகிறது. நகைச்சுவையான திரைக்கதை ஓட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், வலிகளை சுமந்து செல்லும் திரைக்கதையை எதார்த்ததுடன் வடிவமைத்துள்ளார் இயக்குனர்.

அதற்கு முக்கிய காரணமாக பரத் விக்ரமனின் எடிட்டிங் மற்றும் ஷான் ரோல்டனின் பின்னணி இசை அமைந்தது. ஜெயந்த் சேதுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

பிளஸ் பாயிண்ட்

மணிகண்டன், மீதா, ரமேஷ் திலக், ரேச்சல் மற்றும் அனைத்து நடிகர் நடிகைகளின் நடிப்பு.

விநாயக் சந்திரசேகரன் இயக்கம், திரைக்கதை.

எடிட்டிங், பின்னணி இசை, ஒளிப்பதிவு.

மைனஸ் பாயிண்ட்

பெரிதாக ஒன்றுமில்லை.

மொத்தத்தில் குட் நைட் கண்டிப்பாக திரையரங்கில் உங்களை தூங்கவிடாது..