பொன்னியின் செல்வன் 2 திரைவிமர்சனம்

கல்கியின் எழுத்தில் உருவான காவியம் பொன்னியின் செல்வன். இதை இயக்குனர் மணிரத்னம் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இன்று இரண்டாவது பாகமும் வெளிவந்துள்ளது. முதல் பாகத்தின் வெற்றி இரண்டாம் பாகத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. அதே போல் ஆதித்த கரிகாலன் எப்படி, யாரால் கொலை செய்யப்பட்டார் என்பதை மணி ரத்னம் எப்படி காட்டப்போகிறார் என்று பார்க்கவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

கடலில் மூழ்கிய அருண்மொழி வர்மனுக்கும், வந்தியத்தேவனுக்கும் என்ன ஆனது? சோழ வம்சத்தை பழி வாங்கினாரா நந்தினி? யார் இந்த ஊமைராணி? சோழ மகுடம் யாருக்கு? என பல கேள்விகளுக்கு பொன்னியின் செல்வன் 2 எப்படி பதில் கொடுத்துள்ளது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..

முதலில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் கதையை தெரிந்துகொண்டு, பின் இரண்டாம் பாகத்தின் விமர்சனத்திற்கும் செல்வோம்..

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் கதைக்களம்
சோழ மண்ணை ஆண்டு வரும் சுந்தர சோழருக்கு மூன்று பிள்ளைகள். மூத்த மகன் ஆதித்த கரிகாலன், இரண்டாவது மகள் குந்தவை, இளைய மகன் அருண்மொழி வர்மன். இதில் ஆதித்த கரிகாலன் தனது நண்பன் வல்லவரையன் வந்தியத்தேவனுடன் இணைந்து இராஷ்டிரகூடர்களுக்கு எதிராக போர் புரிந்து அதில் வெற்றியும் பெறுகிறார்.

போரின் வெற்றிக்கு பின் தனது தந்தைக்கும், சோழ நாட்டிற்கும் துரோக சதி நடக்கவிருப்பதை அறிந்துகொள்ளும் ஆதித்த கரிகாலன், தனது நண்பன் வந்தியத்தேவனை தஞ்சைக்கு ஒற்றனாக அனுப்பிவைக்கிறார். அங்கு சென்று தனது தந்தையையும், தங்கையையும் சந்தித்து நடக்கும் சதிகளை எடுத்துக்கூற ஆணையிடுகிறார்.

இதனால் தஞ்சைக்கு புறப்படும் வந்தியத்தேவன் காவிரியின் அழகையும், பெண்களையும் ரசித்துக்கொண்டே கடம்பூர் சம்புவரையர் மாளிகையை அடைகிறார். அங்கு சுந்தர சோழருக்கு பின் மதுராந்தகன் தான் அரசனாக வேண்டும் என்று பெரிய பழுவேட்டரையறுடன் சிற்றரசர்கள் பலர் இணைந்து சதி திட்டம் தீட்டி வருகிறார்கள். இதை ஒரு புறம் வந்தியத்தேவன் மறைந்திருந்து பார்க்க மற்றொரு புறம் ஆழ்வார்கடியானும் ஒளிந்திருந்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

இதன்பின் தனது பயணத்தை தொடரும் வந்தியத்தேவன் வழியில் நந்தினியை சந்திக்கிறார். அதன்பின் சோழ அரசர் சுந்தர சோழரை சந்திக்கும் வந்தியத்தேவன், சோழ குலத்திற்கு ஆபத்து சூழ்ந்துள்ளது என்பதை எடுத்துரைக்கிறார். அரசரை சந்தித்த கையோடு சில நாடகங்களுக்கு பின் குந்தவையை சந்திக்கும் வந்தியத்தேவன், அவளிடம் தனது மனதை பறிகொடுக்க, குந்தவையும் அவனிடம் காதலில் விழுகிறாள்.