தாடி பாலாஜி மனைவி மீது வழக்கு பதிவு!

திரைப்பட நடிகரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருபவருமான தாடி பாலாஜியின் மனைவி நித்யா (35). இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் இவர்களின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. நித்யா தற்போது மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு சாஸ்திரி நகரில் தனது மகளுடன் வசித்து வருகிறார்.

அதே பகுதியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி (வயது 62). இருவருக்கும் கார் நிறுத்துவது தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. மணியின் காரை கடந்த 10 நாட்களுக்கு முன்பு நித்யா சேதப்படுத்திள்ளார். இதனை மணி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் நித்யா சேதப்படுத்தியது உறுதியானது.

இது குறித்து மணி கொடுத்த புகாரின் பேரில் மாதவரம் போலீசார் நேற்று நித்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.