பள்ளி தோழரை மணக்கிறார் கீர்த்தி சுரேஷ்..? தாயார் மேனகா பதில்..

தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த ‘சாணிக்காயிதம்’ படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது. தொடர்ந்து தெலுங்கில் நானியுடன் தசரா படத்திலும் தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளன.

இவர் அடுத்ததாக இயக்குனர் சந்துரு இயக்கத்தில் ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி பிசியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் அவரது பள்ளி தோழரை பத்தாண்டுகளுக்கு மேலாக காதலித்து வருவதாகவும் இவர்களின் திருமணம் சில ஆண்டுகளில் நடைபெறவுள்ளதாகவும் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டதாக தகவல் பரவி வந்தது.

இந்நிலையில், இந்த செய்தி குறித்து கீர்த்தி சுரேஷின் தாயார் நடிகை மேனகா, “பரபரப்புக்காகக் கிளப்பி விடப்படும் செய்தி இது. இது மாதிரி வெளியாகிற எந்தச் செய்தியையும் பார்க்கக் கூட நாங்கள் விரும்புவதில்லை. கீர்த்தியின் திருமணம் தொடர்பான சோஷியல் மீடியா தீனிக்கு எங்களுடைய பதில் இதுதான்” என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.