இலங்கை வந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் நான்கு உயர் அதிகாரிகளும் இலங்கை வந்துள்ளனர்.

மாலைதீவு விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை வந்த ஜெய்சங்கர்

இவர்கள் மாலைதீவுக்கான விஜயத்தை முடித்து கொண்டு இலங்கை வந்துள்ளதுடன் இந்தியாவுக்கு சொந்தமான சிறப்பு விமானத்தில் இன்று பிற்பகல் 2.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினரை வரவேற்பதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.

முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாக தகவல்

இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி ஆகியோருடன் இருத்தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

மேலும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விடயங்கள் உட்பட முக்கிய விடயங்கள் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதுடன் இரு நாடுகளுக்கு இடையில் இரண்டு முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.