வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்

வாட்ஸ்அப் நிறுவனம் தனது மெசேஜிங் செயலியில் ஏராளமான புது அம்சங்களை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புது அம்சங்கள் செயலியின் ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும் முன்பே பீட்டா வெர்ஷனில் சோதனை முயற்சியாக வழங்கப்பட்டு விடும். அந்த வகையில் வாட்ஸ்அப் ஐஒஎஸ் பீட்டா வெர்ஷனில் புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபற்றிய தகவல்களை WABetaInfo வெளியிட்டு இருக்கிறது.

இதில் புது அம்சம் எப்படி காட்சியளிக்கும் என்ற ஸ்கிரீன்ஷாட் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி பயனர்கள் அதிகபட்சம் 30 நொடிகள் கொண்ட வாய்ஸ் ஸ்டேட்டஸ்களை பதிவிட முடியும் என தெரியவந்துள்ளது. மற்றவர்கள் திரையின் கீழ்புறம் வலதுபக்கமாக இருக்கும் மைக்ரோபோன் ஐகானை க்ளிக் செய்து வாய்ஸ் ஸ்டேட்டஸ்களை பார்க்க முடியும்.

இதுவரை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பாரில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மட்டுமே இடம்பெற்று இருந்தது. தற்போது வாய்ஸ் ஸ்டேட்டஸ் இந்த பட்டியலில் புதிதாக இணைய இருக்கிறது. தற்போது பீட்டா வெர்ஷனில் இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. வழக்கமான ஸ்டேட்டஸ்கள் 24 மணி நேரத்திற்கு மட்டுமே காண்பிக்கும். இதே போன்ற நிலையை புதிய வாய்ஸ் ஸ்டேட்டஸ்-இலும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

முன்னதாக இதே அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.22.21.5 வெர்ஷனில் வழங்கப்பட்டு இருந்தது. இது மட்டுமின்றி வாட்ஸ்அப் நிறுவனம் மேலும் சில அம்சங்களை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. எனினும், இவை எப்போது செயலியின் ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.