இரும்புச் சத்து குறைபாட்டால் ஏற்ப்படும் தாக்கங்கள்

ரத்தசோகை நோயை ஆங்கில மருத்துவத்தில் அனிமியா என்று அழைப்பார்கள். பொதுவாக இது இரும்புச் சத்து குறைபாட்டால் வருகிறது. இந்நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் போதிய சிவப்பணுக்கள் இருக்காது. சிவப்பணுக்கள் உடலில் உள்ள தாதுக்களுக்கு பிராண வாயுவை கொடுத்து உதவுகின்றன. ரத்தசோகையில் பல நுண் பிரிவுகள் உள்ளன. இரும்புச்சத்து குறைபாட்டால் வரும் சோகை நோயைப் பற்றி பார்ப்போம்.

இரும்புச்சத்து குறைந்தால் ரத்த அணுக்கள் உருவாகாது. நடைமுறையில் நாம் அதிகமாகப் பார்க்கும் சோகை நோய், இரும்புச்சத்து குறைவதால் வருவதே. எலும்பு மஜ்ஜையில் இருந்து சிவப்பணுக்கள் உருவாகின்றன. இந்த சிவப்பணுக்கள் உடலில் வியாபித்து 3 முதல் 4 மாதங்களுக்கு வாழ்கின்றன. பிறகு மண்ணீரல் இதை அப்புறப்படுத்துகிறது. சிவப்பு அணுக்களில் இரும்புச்சத்து பெரும் பங்கு வகிக்கிறது. இரும்புச்சத்து இல்லை என்றால் ரத்தத்தால் பிராண வாயுவைக் கையாள முடியாது. பொதுவாக உணவில் இருந்தே இரும்புச் சத்து கிடைக்கிறது.

நமது உடலில் இரும்புச் சத்தின் சேமிப்பு குறைகிறபோது, ரத்தசோகை நோய் ஏற்படுகிறது. சிலருக்கு மூலம் போன்ற நோய்களால் ரத்தம் வெளியேறும். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ரத்தம் வெளியேறும். வயிற்றில் குடல் புண் ஏற்பட்டும் ரத்தம் வெளியேறும். ஒரு சிலரின் உடலில் இரும்புச் சத்தை ஏற்றுக்கொள்ளும் தன்மை இருக்காது. குறிப்பாகப் பேறு காலங்களிலும் தாய்ப்பால் ஊட்டுகிற காலங்களிலும் இரும்புச் சத்து அதிகமாகத் தேவைப்படும்.

ஒரு சில நேரம் உணவுக் குழாய் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், சிறுகுடல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் நோய், சிறுநீரக நோய், வலி நிவாரணி மாத்திரைகளை அதிகம் சாப்பிடுதல் போன்றவற்றால் ரத்தசோகை உருவாகலாம். முடக்குவாதம் போன்ற நோய்களாலும் ரத்தசோகை ஏற்படலாம். கோழிக்கறி, பாசிப்பயறு, பீன்ஸ், மீன், இறைச்சி, சோயா பீன்ஸ், முந்திரிப்பருப்பு, கீரைகள், பேரீச்சம்பழம், வெல்லம், பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. அசைவம் சாப்பிடுபவர்கள் கல்லீரல், முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றைச் சாப்பிடலாம். ரத்தசோகை நோய்க்குத் திராட்சை, ஆடாதொடை, சிற்றமிர்து குடிநீர், மண்டூர வடக மாத்திரை, அயகாந்த செந்தூரம், சோற்றுக் கற்றாழை, இரும்புச் சத்து சேர்த்துச் செய்யப்பட்ட குமாரியாஸவம் போன்றவை பயன் அளிக்கின்றன.