யாழில் தனது மகளை கொடுமைப்படுத்தி காணொளியை வெளியிட்ட தந்தை கைது!

யாழில் தனது 4 வயதான மகளை மூர்க்கத்தனமாக தாக்கி , அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட தந்தை இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக குறித்த காணொளி வெளியாகியது.

தாக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயாரும் வீட்டிலிருந்து வெளியேறி யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் கடந்த திங்கட்கிழமை இருந்துள்ளனர்.

அந்தப் பகுதியினால் பயணித்த குடும்பநல உத்தியோகத்தர் ஒருவர் அந்த சிறுமியை இனங்கண்டு மீட்டு வடமாகாண சிறுவர் பராமரிப்பு திணைகளத்திடம் குடும்பநல உத்தயோகத்தர் ஒப்படைத்திருந்தார்.

தந்தை கைது
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை சுருவில் பகுதியில் சிறுமியின் தந்தையை தேடிய போதும் அவர் தலைமறைவாகி உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை யாழ்ப்பாணம் மாநகர பகுதியில் வைத்து சிறுமியைத் தாக்கிய தந்தை ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

தாயாருடன் ஏற்பட்ட முரண்பாட்டில் மகளைத் தாக்கி அதனை அலைபேசியில் காணொளி எடுத்ததாகவும் மனைவியின் அலைபேசியிலிருந்து அவரது நண்பிக்கு சென்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியதாகவும் சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.