செவ்வாய் தோஷம் திருமண தடையை ஏற்படுத்துமா? பரிகாரம் பலம் தருமா?

செவ்வாய் தோஷம் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக பலருடைய வாழ்க்கையில் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே வருவதை நாம் அனுபவத்தில் காண்கிறோம். ஜாதக தோஷங்களில் மிக பிரபலமாக அனைவருக்கும் தெரிந்த தோஷம் “செவ்வாய் தோஷம்” ஜாதக கட்டத்தில் லக்னம், ராசி மற்றும் சுக்கிரனுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். இதில் சுக்கிரனுக்கு செவ்வாய் தோஷம் பார்ப்பது நடைமுறையில் சரிவரவில்லை.

சுக்கிரனும் செவ்வாயும் ஒன்றை ஒன்று ஈர்க்கும் கிரகம் என்பதால் தோஷம் ஏற்பட வாய்ப்பில்லை. பாவக ரீதியாக செவ்வாய் நின்ற இடத்திற்கு ஏற்ப தோஷத்தினால் சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பல்வேறு விதி விலக்குகளால் சிலருக்கு தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும் கூட 2,7,8-ம்மிடத்தில் உள்ள செவ்வாய்க்கு 2,7,8-ல் செவ்வாய் உள்ள ஜாதகத்தையும் 4,12-ம் இடத்தில் உள்ள செவ்வாய்க்கு 4,12ல் செவ்வாய் உள்ள தோஷத்தையும் சேர்க்க வேண்டும்.

லக்னத்தைப் பொறுத்தவரை கடக லக்னம், சிம்ம லக்னம் ஆகிய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கே இருந்தாலும் இந்த தோஷம் இல்லை என்று சொல்லலாம். செவ்வாய் இருக்கக்கூடிய 2- இடமானது மிதுனம் அல்லது கன்னியாக இருந்தால் தோஷம் இல்லை. செவ்வாய் 4-ல் இருந்து அந்த இடம் மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளாக இருந்தால் தோஷம் இல்லை. அதேபோல் களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் இருந்து, அந்த ஸ்தானம் கடகமாகவோ அல்லது மகரமாகவோ இருந்தால் தோஷம் இல்லை. செவ்வாய் இருக்கும் 8-வது இடம் தனுசு அல்லது மீனமாக இருந்தாலும், 12-வது இடம் ரிஷபம், துலாமாக இருந்தாலும் இந்த தோஷம் இல்லை.

செவ்வாய் தோஷம் ஒருவருக்கு இருந்து ஒருவருக்கு இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது என்பது சாஸ்திரம். இருவருக்கும் இந்த தோஷம் இருந்தால் திருமணம் செய்து வைக்கலாம் என்றும் சொல்வார்கள். ஆனால், பொதுவாக தோஷம் ஒருவருக்கு இருந்தாலும் சரி அல்லது இருவருக்குமே இருந்தாலும் சரி தக்க ஜோதிடர்களை ஆலோசித்து, முறைப்படி பரிகாரங்கள் செய்வதுதான் சரி. பொதுவாக செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடையை சந்திப்பவர்கள் செவ்வாய் கிழமை ராகு வேளையில் சுப்ரமணியரை சிவப்பு அரளி சாற்றி வழிபட்டால் திருமணம் நல்ல முறையில் நடக்கும்.