யாழிலுள்ள கோவில் குளம் ஒன்றில் சட்டவிரோத மண் அகழ்வு!

யாழ்ப்பாணம் – வலி. வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட வறுத்தலைவிளான் பிள்ளையார் கோவில் குளத்தில் பாரிய மண் அகழ்வு இடம்பெற்று வருகிறதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

விற்பனை செய்யப்படும் குளத்து மண்
குறித்த பிள்ளையார் கோயில் குளத்தில் தாமரை வளர்க்கப் போவதாக தெரிவித்து தனியார் ஒருவர், குளத்தில் இருந்து சுமார் 200 லோட்டுக்கு அதிகமான மணலை எடுத்து வெளி இடங்களில் விற்பனை செய்து வருவதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் அந்த குளத்தில் கால்நடைகள் நீர் அருந்தும் நிலையில், பாரிய குழிகள் தோண்டப்பட்டு மண் அகழ்வு இடம்பெறுவதால் கால்நடைகள் அக்குளத்துக்குள் மூழ்கும் துர்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் ஊர் மக்கள் சிலர் மணல் அகழ்பவர்களிடம் வினவிய போது, பிரதேச சபை தவிசாளரின் அனுமதியின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதாக குறிப்பிட்டுள்ளனர் என தெரியவருகிறது.

சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் கவனம்
குறித்த விடயம் தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பிரபாகரன் கருத்து தெரிவிக்கையில், குறித்த குளத்தில் இருந்து ஒரு கிழமைக்கு மேலாக பாரிய மண் அகழ்வு இடம்பெறுகிறது. சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் பிரதேச சபை செயலாளருக்குத் தெரியப்படுத்தியதோடு, தெல்லிப்பழைப் பிரதேச செயலாளருக்கும் தெரியப்படுத்தியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தனை தொடர்பு கொண்டபோது, குறித்த குளம் கமநல சேவைத் திணைக்களத்தின் கீழ் வருவதால் மண் அகழ்வுக்கு தாம் அனுமதி வழங்கவும் இல்லை என்றும், தன்னால் அனுமதி வழங்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வலி. வடக்கு பிரதேச சபையின் செயலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, பிரதேச சபை அதற்கான அனுமதியை வழங்கவில்லை என தெரிவித்ததோடு, மண் அகழ்வு தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் தமக்கு அறியத் தந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பில் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவசிறியைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, குறித்த பகுதியில் மணல் அகழ்வு தொடர்பாக கடந்த 18ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.