டி20 உலகக் கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஐக்கிய அரபு அமீரகம்

டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்று குரூப்-ஏ லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நமீபியா அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய துவக்க வீரர் முகமது வாசீம் 50 ரன்கள் விளாசினார். விருத்யா அரவிந்த் 21 ரன்கள் சேர்த்தார்.

கேப்டன் ரிஸ்வான் 43 ரன்களுடனும், பாசில் ஹமீது 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணி 16 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. துவக்க வீரர்கள் மைக்கேல் 10 ரன்னிலும், ஸ்டீபன் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஜேன் நிகோல் ஒரு ரன், ஜெர்ஹார்டு 16 ரன், ஜேன் பிரைலிங்க் 14 ரன், ஜேஜே ஸ்மித் 3 ரன், ஜேன் கிரீன் 2 ரன் என விரைவில் விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வீஸ், அரை சதம் கடந்து நம்பிக்கை அளித்தார். அவருடன் ரூபன் இணைய அணியின் ரன் ரேட் உயர்ந்தது. ஆட்டத்தின் கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் 3 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், 4வது பந்தில் வீஸ் ஆட்டமிழந்தார்.

அவர் மொத்தம் 55 ரன்கள் சேர்த்திருந்தார். அவர் ஆட்டமிழந்ததால் ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சாதகமாக திரும்பியது. அடுத்த இரண்டு பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்ததால், நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களே எடுத்தது. இதனால் ஐக்கிய அரபு அமீரகம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் உலகக் கோப்பை தொடரில் ஐக்கிய அரபு அமீரகம் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. முகமுது வாசீம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நமீபியா தோல்வியடைந்ததால், சூப்பர்-12 வாய்ப்பினை இழந்தது. குரூப் ஏ பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறி உள்ளன.