இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

உலகில் உயிர்கள் தோன்றிட உறவுகள் மலர்ந்திட உரிப்பொருளாக விளங்குபவள் பெண் என்னும் பேராற்றல். அப்பாவிற்கு தேவதையாகவும், அம்மாவிற்கு தெய்வமாகவும், சகோதரர்களுக்கு செல்லமாகவும் வலம் வரும் பெண் குழந்தைகளை கொண்டாடும் வகையில் 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந் தேதியை‌ சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக ஐ.நா.சபை அறிவித்தது.

இன்றைய காலகட்டங்களில் அவர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை களைவதோடு, அவர்களை ஊக்குவித்து கவுரபடுத்தும் விதமாக இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பிறந்த போதே கள்ளிப்பால் கொடுத்து அதனை அழிக்க தொடங்கிய பெண் சிசுக்கொலை ஆண்டுகள் பல கடந்தாலும் இன்றும் எங்கோவோர் இடத்தில் நடந்து கொண்டு இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. சமூகத்தில் நிலவி வரும் பாலின சமத்துவமின்மை காரணமாக பெண் குழந்தைகளின் அடிப்படை உரிமைகளும், அத்தியாவசிய தேவைகளும் ஒடுக்கப்படுகின்றன. ஆண் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் எந்தவொரு சுதந்திரமும் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படுவது இல்லை என்ற சூழல் இன்றளவும் நிலவுகிறது.

இது தவிர பெண் குழந்தைகளுக்கு எதிரான குழந்தை திருமணம் என்ற கொடுமையான நிகழ்வு இன்றும் இருப்பது மனவேதனை தரும் செய்தியாகும். நாகரிகம் வளர்ந்தாலும் இன்றைய சூழலில் குழந்தை திருமணம் நடைபெற்றுக் கொண்டிருப்பது அவர்களின் உரிமை பறிக்கப்படுவதன் அடையாளமாகவே கருதப்படுகிறது. பல ஆண்டுகள் நடந்த போராட்டங்களின் விளைவாக தற்போது பெண் குழந்தைகளுக்கு எதிரான ஒடுக்கப்படும் சூழல்கள் மாறி வருகின்றன. அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் தடையின்றி வந்தடைகிறது‌. வீட்டில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணும் இப்போது ஒலிம்பிக்கில் கோப்பையை வெல்கிறாள். அடுப்பங்கரையில் அடைப்பட்டிருந்தவள் ஆகாய விமானத்தை இயக்குகிறாள்‌.

இவையெல்லாம் பாலின சம உரிமை ஊக்குவிப்பதாக இருந்தாலும்கூட, இக்காலத்தில் அவர்கள் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்படும் அவலநிலை பெருகி வருகிறது. பருவ நிலை அடைந்த பெண்ணை விட, சின்னஞ்சிறு குழந்தைகள்கூட பாலியல் வன்மத்தால் சிதைக்கப்படுகிறார்கள். பள்ளி செல்லும் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்யும் மிருகத்தனமான மனிதர்களால், ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதா? அல்லது வீட்டிலே பாதுகாப்பதா? என்ற சிந்தனைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பல ஆண்டுகளாக போராடி வாங்கிய உரிமைகள் பறிக்கப்பட்டு மீண்டும் பிற்போக்கான சமுதாயத்தில் பெண் குழந்தைகள் அடைக்கப்பட்டு விடுவார்களோ என்ற அச்சமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இத்தகு கொடுமையான நிகழ்வுகளை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அப்போதுதான்‌ இந்த நிலை மாறும்‌, பெண் குழந்தைகளின் எதிர்காலமும் வளம்பெறும் என்பது முற்றிலும் உண்மை. இத்தகைய தடைகளையும், கொடுமைகளையும் தாண்டி வளர்ந்து வரும் பெண் குழந்தைகளுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு உறுதுணையாகவும் இருந்திட இந்நாளில் நாம் உறுதியேற்போம்.