தம்பதிகளின் ஒற்றுமையை அதிகரிக்க செய்யும் விரதம்

இன்று (செவ்வாய்க்கிழமை) அசூன்ய சயன விரதம் மேற்கொள்ள வேண்டிய தினமாகும். ‘அசூன்யம்’ என்றால் சூனியம் இல்லாதது என்று பொருள். ‘சயனம்’ என்றால் படுக்கையில் படுத்தல். இந்த விரதம் கடைப்பிடிப்பதன் மூலமாக நிம்மதியான தூக்கமும், நிறைவான வாழ்க்கையும் கிடைக்கும். அசூன்ய சயன விரத நாளில் பெருமாள் கோவிலில் தரிசனம் செய்ய வேண்டும்.

குறிப்பாக பள்ளிகொண்ட பெருமாள் சேவை சாலச் சிறந்தது. இன்று மாலை பூஜை அறையில் விளக்கேற்றி கிருஷ்ணர்-ராதை அல்லது மகாவிஷ்ணு- மகாலட்சுமி படத்தை பூக்களால் அலங்கரிக்க வேண்டும். இப்பூஜையை தம்பதிகளாக செய்வது நல்லது. ரங்கநாத அஷ்டகம், கிருஷ்ணாஷ்டகம் பாடி அர்ச்சனை செய்ய வேண்டும். ஏலக்காய், குங்குமப்பூ போட்டு காய்ச்சிய வாசனையுள்ள பசும்பால் நிவேதனம் செய்ய வேண்டும்.

புதிதாக வாங்கப்பட்ட பஞ்சு மெத்தை அல்லது பாய், தலையணை, போர்வையுடன் கூடிய படுக்கையில், கிருஷ்ணரையும், மகாலட்சுமியையும் சயனிக்க வைக்க வேண்டும். அடுத்த நாள் தகுதி உடையோருக்குப் போர்வையுடன் கூடிய படுக்கை தானம் செய்ய வேண்டும். இதனால் கணவன்-மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும்.