குழந்தை பாக்கியம் அருளும் சந்தான கோபால விரதம்

நம் முன்னோர்கள் பல்வேறு விரதங்களை உருவாக்கிக் கொடுத்து, அதனை மேற்கொள்ளும் வழிகளையும் அறிவுறுத்தியுள்ளனர். அதில் ஒன்றுதான் “சந்தான கோபால விரதம்”. இந்த விரதம் புரட்டாசி மாதத்தில் அமாவாசையை அடுத்து வரும் பவுர்ணமி தினத்தில் குழந்தை இல்லாத தம்பதிகளால் பகவான் கிருஷ்ணனை வேண்டி மேற்கொள்ளப்படுகிறது. விரதம் இருந்து கிருஷ்ணரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

சந்தான கோபால விரதத்தை முழுமையாகப் பின்பற்ற முடியாதவர்கள் பிரத்யேகமாக சில ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டால் பலன் கிடைக்கும். அத்தகைய தலங்களில் ஒன்றுதான் மேல்வெண்பாக்கம் ஸ்ரீஸ்வதந்த்ர லட்சுமி நாயிகா சமேத ஸ்ரீ யுகநாராயணப் பெருமாள் கோவில். சந்தான பாக்கியத்துக்கும், மகாலட்சுமி கடாட்சத்துக்கும் உகந்த மந்திரங்கள் அடங்கிய ஸ்ரீ லட்சுமி நாராயண இருதயம். பகவான் கிருஷ்ணனே திருவாய் மலர்ந்தருளுவ தாக ஸ்ரீமந் நிகழாந்த தேசிகன் அருளிச் செய்த ‘யாதவாப்யுதயம்’ மகா காவியத்தில் காணப்படும் கோவர்தன கிரி மகாத்மியம், பிரம்மாவின் புத்திரர் சனத்குமாரர் அருளிச் செய்த ஸ்ரீ சந்தான கோபால தோத்திரம் ஆகிய மூன்றும் இத்தலத்தில் பெருமாள் சந்நிதியில் பாராயணம் செய்யப்படுகிறது.

இதை கேட்பவர்களுக்கு சந்தான பிராப்தி கிடைப்பது உறுதி என கூறப்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே உள்ள மேல்வெண்பாக்கம் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவிலுக்கு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சீபுரத்தை அடுத்து பாலுசெட்டிசந்திரம், தாமல்தாண்டி பனப்பாக்கம் செல்லும் சாலையில் செல்ல வேண்டும்.