மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பும் அர்ணவ்

சின்னத்திரை நடிகரான அர்னவ், தன்னுடன் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில தினங்களாக கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகின்றனர். தனது கணவர், கர்ப்பிணியான தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், தன்னை மதம் மாற கட்டாயப்படுத்தியதாகவும் திவ்யா புகார் தெரிவித்தார்.

ஆனால் தனது மனைவிதான் அவரது நண்பர்கள் சொல்வதை கேட்டு இதுபோல் நடந்து கொள்வதாகவும், அவருடன் சேர்ந்து வாழவே விரும்புவதாகவும் அர்னவ் கூறினார். மேலும் அர்னவ், திவ்யா தன்னுடன் சண்டைபோடும் வீடியோக்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கிடையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திவ்யா அளித்த புகாரின்பேரில் போரூர் அனைத்து மகளிர் போலீசார் அர்னவ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று திருவேற்காட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் சின்னத்திரை நடிகர் அர்னவ், நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, என் மனைவி திவ்யாவை நான் அடித்ததாக கூறி போலீசில் புகார் அளித்தார். ஆனால் என் விரல் கூட அவர் மீது படவில்லை. அவர் அளித்த பொய்யான புகாரில் என் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எனக்கு என் மனைவி வேண்டும். என்னுடைய மனைவி, குழந்தையை மீட்டு தர வேண்டும். எங்கள் குடும்ப சண்டையை அவருடன் இருப்பவர்கள் இப்படி பெரிதாக்கிவிட்டனர். திவ்யாவின் நண்பர்கள் தரப்பில் வக்கீல் ஒருவருடன் சேர்ந்து இதுபோல் செய்து வருகின்றனர். இதுவரை திவ்யா போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்கிறார். என் மனைவியுடன் நான் சேர்ந்து வாழ வேண்டும். பிறக்கப்போகிற குழந்தையுடன் நான் இருக்க வேண்டும். என் மனைவி மற்றும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது. மீறி பாதிப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன்.

அர்னவ் பேட்டி அளித்த சிறிது நேரத்தில் திவ்யாவும், தன்னுடன் நடிக்கும் சக நடிகை மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, நான் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு தான் மன ரீதியாக பாதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்று வந்தேன். அர்னவ் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று வாய் அளவில் மட்டுமே கூறி வருகிறார். மனதளவில் அவர் கூறவில்லை. 45 நாட்கள் என்னுடன் பேசாமல் ஒரே வீட்டில் இருந்தார். இதனாலேயே நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். நான் கருவை கலைக்க வேண்டும் என்றால் ஏன் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும்? இவ்வாறு அவர் கூறினார்.