யாழில் பாணின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது!

பிறீமா நிறுவனத்தின் கோதுமை மா விலை உயர்த்தப்படாத நிலையில் வெதுப்பக உரிமையாளர்கள் பாணின் விலையினை அதிகரிக்க வேண்டிய தேவை இல்லை என யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பாக உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் குணரட்ணம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாண் விலை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறீமா நிறுவனத்தின் கோதுமை மா அனைத்து வெதுப்பக உரிமையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. அது தொடர்ச்சியாக வழங்கப்படும். விலையில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை.

பாணின் விலையை அதிகரிக்க வேண்டிய தேவையில்லை.

கொழும்பில் பாணின் விலை உயர்த்தப்படுவதற்காக யாழ்ப்பாணத்தில் பாணின் விலையை அதிகரிக்க வேண்டிய தேவையில்லை. 12 ஆயிரத்து 500 ரூபாவிற்கு பிறீமா நிறுவனத்தினரால் எமக்கு மா வழங்கப்படுகின்றது.

எனவே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 200 ரூபாய்க்கு மேல் பாணின் விலையினை அதிகரிக்க தேவையில்லை. அவ்வாறு யாராவது பாணின் விலையினை அதிகரித்து விற்றால் அவர்களுக்குரிய எரிபொருள் மற்றும் எரிவாயு பெறுவதற்கான சலுகைகள் நீக்கப்படக்கூடிய சாத்திய கூறுகள் காணப்படுகின்றன.

அதாவது வெதுப்பக உரிமையாளர்கள் யாராவது கோதுமை மா தேவைப்படுவோர் எமது சங்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் அவர்களுக்குரிய மாவினை கட்டுப்பாட்டு விலையில் பெற்றுக் கொடுக்க முடியும்.

ஆனால் அதிக விலைக்கு பாணினை விற்க வேண்டிய தேவை இல்லை. பிறீமா நிறுவனத்தின் கோதுமை மா விலை உயர்த்தப்படும் வரை பாணின் விலை யாழில் உயர்த்தப்படாது என்றார்.