யாழில் இராணுவத்தால் மூடப்பட்ட வீதி திறந்து வைப்பு!

யாழ்ப்பாணம் – கட்டுவான், மயிலிட்டி வீதியில் இராணுவத்தினரால் மூடப்பட்டிருந்த 480 மீட்டர் வீதி, வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் புனரமைக்கப்பட்டு மக்களின் பாவணைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விதியானது, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இராணுவ தளபதி லித்தும் லியனகே தலைமையில் நேற்று(27) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மக்களின் காணிகள் விடுவிப்பு

வலிகாமம் வடக்கில் சுமார் 30 வருட காலமாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த காணிகளில் ஒரு தொகுதி கடந்த அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டிருந்தது.

இதன்போது கட்டுவன் – மயிலிட்டி வீதி விடுவிக்கப்பட்டு அதன் மேற்குப் புறமான மக்களின் காணிகளும் விடுவிக்கப்பட்டிருந்தன.

எனினும் இந்த வீதியில் இடையில் சுமார் 480 மீட்டர் வீதிப் பகுதி (மயிலிட்டி தெற்கில்) உயர்பாதுகாப்பு வலயத்தினுள் இருந்தது. அதனை முட்கம்பி வேலியால் மூடி வளைத்து வீதியின் ஏனைய பகுதியை விடுவித்தனர்.

மேலும் விமான நிலையத்தின் பாதுகாப்பு பிரச்சினை என காரணம் கூறி, வீதியின் குறித்த பகுதியை விடுவிக்க முடியாது என படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்சவிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 7 ஆம் திகதி நாடளுமன்றத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் அங்கஜன் இராமநாதன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்த வீதி விடுவிக்க வேண்டிய அவசியத்தை கூறியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து இராணுவத்தினரின் பொறியியல் பிரிவினர் முதல் கட்ட வேலைகளை செய்ததுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் வீதி புனரமைப்பினை மேற்கொண்டனர்.

480 மீட்டர் வீதியை புனரமைப்பு நடவடிக்கைக்காக 29.4 மில்லியன் ஒதுக்கப்பட்டதுடன், 5 மீட்டர் அகலமான வீதியாக புனரமைப்பு செய்யப்பட்டு, தற்போது பாவனையில் உள்ள வீதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பழைய வீதியுடன் இணைப்பு
குறித்த வீதி புதிதாக அமைக்கப்பட்டு, பழைய வீதியுடன் இணைக்கப்படுவதால் தெல்லிப்பளையால் வருபவர்கள் யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு இலகுவாக பயணிக்க முடியும் என்பதுடன் மயிலிட்டி பகுதி மக்களும் இந்த வீதியை பயன்படுத்தி தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு செல்ல முடியும்.

அத்துடன் இங்கு இடம்பெறும் பேருந்து சேவை மயிலிட்டி சந்தியிலிருந்து யாழ்ப்பாணம் விமான நிலையம் ஊடாக கிராமக்கோட்டு சந்தியூடாக திரும்பி, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் வீதியில் செல்லும் பேருந்து, திறக்கப்பட்ட வீதியூடாக செல்லுமாயின் தெல்லிப்பளை வைத்தியசாலை மற்றும் தெல்லிப்பளை சந்திக்கு செல்வோருக்கும் இலகுவாக அமையும்.

மேலும் பலாலி வீதி- குரும்பசிட்டி, மல்லாகம் ஊடாக யாழ்ப்பாணம் விமான நிலையம், மயிலிட்டிக்கு வருபவர்கள் கட்டுவன் மயிலிட்டி வீதியூடாக செல்லவும் முடியும். இது இலகுவான வீதியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.