சீன போர் கப்பலின் உளவு பணியை முறியடித்த இந்திய செயற்கை கோள்கள்

இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்திற்கு சீன உளவு கப்பலான யுவான் வாங் 5 கடந்த சில வாரங்களுக்கு முன்பு வந்தது. இந்த கப்பல் கடந்த 22-ந் தேதி இலங்கையில் இருந்து மீண்டும் புறப்பட்டு சென்றது. இந்த கப்பல் இலங்கையில் நிறுத்தப்பட்டிருந்த போது தென் இந்தியாவில் உள்ள முக்கிய ராணுவ நிலைகளின் ரகசியம் கசிந்து விடும் என்று கூறப்பட்டது. மேலும் தென்னிந்தியாவில் உள்ள அணு உலைகள், கடற்படை தளங்கள் போன்றவற்றின் செயல்பாடுகளையும், அதன் தகவல்களையும் சீன உளவு கப்பல் கண்டறிந்து விடும் என கூறப்பட்டது.

இதனால் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் தகவல் வெளியானது. இதையடுத்து இலங்கைக்கு வந்த சீன உளவு கப்பலை தடுத்து நிறுத்தாது ஏன்? என்ற கேள்வி அனைத்து தரப்பினராலும் எழுப்பபட்டது. ஆனால் இந்த கேள்விகள் எதையும் கண்டுகொள்ளாத இந்திய ராணுவம், உளவு பார்க்க வந்த சீன உளவு கப்பலை அங்குலம், அங்குலமாக உளவு பார்த்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

இதனால்தான் இலங்கை அம்பன்தோட்டா துறைமுகத்தில் இருந்து சீன உளவு கப்பல் 22-ந் தேதியே புறப்பட்டு சென்று விட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த சாதனையை இந்தியா எப்படி நிகழ்த்தியது என்ற விபரம் இப்போது வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு காரணம் இந்திய ராணுவத்திற்காக அனுப்பபட்ட ஜி சாட் 7, ஜி சாட் 7 ஏ ஆகிய செயற்கைேகாள்களே ஆகும். இந்த செயற்கைகோள்கள் இந்திய விமான படை மற்றும் கடற்படைக்காக ஏவப்பட்டவையாகும்.

இந்த செயற்கை கோள்கள் மூலம் இந்திய வான் எல்லையில் அத்துமீறி நுழையும் விமானங்கள், டிரோன்கள், வான்வெளியில் நுழையும் மர்ம பொருள்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இவை தான் சீன உளவு கப்பல் இலங்கை துறைமுகம் வந்ததும் அதில் இருந்து வெளியாகும் அனைத்து சிக்னல்களையும் இடைமறித்து தடுத்ததோடு, உளவு பார்க்கும் வேலையையும் முறியடித்துள்ளது.

மேலும் சீன உளவு கப்பலை கண்காணிக்க ரிசாட், எமிசாட் உள்பட 4 செயற்கை கோள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எமிசாட் செயற்கை கோளில் இருந்து வெளியாகும் கெடில்லா மின்னணு நுண்ணறிவு தொகுப்பை பயன்படுத்தி இந்திய ராணுவம் சீன உளவு கப்பலில் இருந்து வெளியான அனைத்து சிக்னல்களையும் இடைமறித்து தடுத்துள்ளது. இதன்மூலம் இந்திய ராணுவம் தொடர்பான எந்த தகவலையும் சீன உளவு கப்பல் சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.