பிரித்தானியாவில் 9 வயதான அப்பாவி சிறுமி மரணம்!

பிரித்தானியாவில் வாடகை கொலையாளியின் துப்பாக்கி குண்டுக்கு 9 வயதான அப்பாவி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதி மக்களை மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது சிறுமி Olivia Pratt-Korbel தூக்கத்திற்கு தயாராகியுள்ளார். அப்போது திடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்க, சிறுமியின் தாயார் Cheryl Korbel தங்களது குடியிருப்பின் முன் வாசலை திறந்துள்ளார்.

தாயாரின் பின்னால் சிறுமியும் ஒளிந்து கொண்டு வேடிக்கை பார்த்துள்ளார். இந்த நிலையிலேயே அந்த கோர சம்பவம் நடந்துள்ளது. 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் தமது நண்பருடன் தெருவில் நடந்து செல்கையில் துப்பாக்கிதாரியால் துரத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அந்த நபர்கள் தமது குடியிருப்புக்குள் நுழைந்துவிடாமல் இருக்க தடை ஏற்படுத்த முயற்சிக்கையில், அந்த வாடகை கொலையாளி துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் ஒரு துப்பாக்கி குண்டு சிறுமியின் உயிரை பறித்துள்ளது. மொத்தம் நான்கு முறை துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கொலையாளியால் துரத்தப்பட்ட நபர் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அவரது நண்பரால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த குடும்பத்தினருக்கு என்ன ஆனது என அந்த நபர்கள் கண்டுகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.

இதனிடையே மார்பில் குண்டு பாய்ந்து தரையில் சரிந்த சிறுமி ஒலிவியாவை அள்ளிக்கொண்டு தாயார் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். ஆனால் சிறிது நேரத்திலேயே சிறுமி மரணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கும், கொலையாளியால் துரத்தப்பட்டு, சிறுமியின் வீட்டுக்குள் வலுக்கட்டாயமாக புகுந்த அந்த இரு நபர்களுக்கும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த அந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆபத்து கட்டத்தை அவர் கடந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.