யோகாவும் – உடற்பயிற்சியும் நோய்களை கட்டுப்படுத்தும்

உடற்பயிற்சியும், யோகாசனமும் நோய்களை கட்டுப்படுத்த கூடுதல் பக்கபலமாக இருக்கும். சிறுநீரக நோயாளிகள் கூட வாரத்தில் 3 நாட்கள் குறைந்தது 30 நிமிடம் நடைபயிற்சியில் ஈடுபடுவது நல்லது. ஆரோக்கியமாக இருப்பவர்கள் 45 முதல் 60 நிமிடங்கள் தினமும் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருக்கும் மா.சுப்பிரமணியன் மக்களிடம் உடற்பயிற்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டுக்காக மாரத்தான் ஓடியே விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஒரு முன்னுதாரணம். பொதுவாழ்வில் இருப்பவர்கள் இவ்வாறு இருப்பது நிச்சயம் மக்களிடத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். நடைபயிற்சியோ, உடற்பயிற்சியோ எதில் ஈடுபட்டாலும் எப்போது நிறுத்த வேண்டும் என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அதாவது தலைசுற்றல், வாந்தி, மயக்கம், இதயம் வித்தியாசமாக துடிப்பது, வலிப்பது, கால் மரத்து போதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே நிறுத்திவிட வேண்டும். யோகா நமது பாரம்பரிய கலை. ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, கிட்னி பிரச்சினைகளை தடுக்கும் யோகாசனங்களும் உள்ளது.

சிறுநீரக பாதிப்பு உடையவர்கள் சிரசாசனம், கபாலபதி, பஸ்கி போன்ற ஆசனங்களை கண்டிப்பாக செய்யக்கூடாது. தச ஊர்த்வா ஹஸ்தாசனம், பாத ஹஸ்தாசனம், அர்த்தகதி சக்ராசனம் ஆகிய ஆசனங்கள் நல்ல பலனை தரும் என்கிறார்கள். யோகாசனத்தை பொறுத்தவரை பயிற்சியாளரிடம் சென்று முறையாக கற்று பயிற்சி செய்வதே நல்லது. நல்ல பலனையும் கொடுக்கும்.