வாழ்க்கை துணையை தேடி தரும் சீரடி சாய்பாபா ஆலயம்

சாய்பாபாவை தேடி வரும் பெரும்பாலான பக்தர்கள் தங்களுக்கு சிறந்த, பண்பான வாழ்க்கை துணை வேண்டும் என வேண்டுதல் வைக்கின்றனர்.

மராட்டிய மாநிலம் சீரடியில் பிரசித்த பெற்ற சாய்பாபா ஆலயம் அமைந்துள்ளது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகிறார்கள். இந்தியா மட்டுமல்லாது உலகில் பல பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாய்பாபா அருளை பெற்று செல்கிறார்கள்.

சாய்பாபாவை தேடி வரும் பெரும்பாலான பக்தர்கள் தங்களுக்கு சிறந்த, பண்பான வாழ்க்கை துணை வேண்டும் என வேண்டுதல் வைக்கின்றனர்.

இந்த நிலையில் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் வகையில் சாய்பாபா பக்தர்களுக்கு என்று தனியாக திருமண சேவையை தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதை ஏற்று கோவில் நிர்வாகம் தற்போது புதிதாக பக்தர்கள் வரன் தேடும் வகையில் shirdivivah.com என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த இணையதளத்தில் மணமகள், மணமகன் தேடுபவர்கள் தங்கள் சுயவிவரம், புகைப்படங்கள் மற்றும் குடும்ப விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

இதற்காக பதிவு செய்ய இலவச சேவை, பணம் கட்டி வரன்தேடுதல், வி.ஐ.பி. சேவை என 3 முறைகள் உள்ளது. ஆண்டு பேக்கேஜ் முறைக்கு ரூ.5,100 மற்றும் ரூ.11 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கபட்டு உள்ளது.

இதன்மூலம் சம்பந்தப்பட்ட வர்களை நேரடியாக தொடர்பு கொண்டு வரன்களை தேர்ந்தெடுக்கலாம். இணையதளத்தில் தினமும் பதிவு செய்யப்படும் அனைத்து சுய விவரங்கள் சாய்பாபா பாதத்தில் வைத்து பூஜிக்கப்படுகிறது.

ஏழ்மையான ஜோடிகளுக்கு திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் செய்யும். அதற்கான செலவும் ஏற்றுக்கொள்ளப்படும் என கோவில் அறக்கட்டளை தலைவர் ரோஷன்குமார் தெரிவித்து உள்ளார்.

இந்த சேவையை சாய்பாபா பக்தர்கள் வரவேற்று உள்ளனர்.